சென்னை: சென்னையில் நேற்று இரவு, முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில், காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் சிங் தியோ ஆகியோர் சந்தித்து பேசினர். தி.மு.க., – காங்., கூட்டணி விவகாரங்கள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் விவாதித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நேற்று இரவு 8:45 மணிக்கு வேணுகோபால், சிங் தியோ சென்றனர். அவர்களுடன், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் இருந்தனர்.
முதல்வர் வீட்டில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி மட்டும் இருந்தார். முதல்வர் ஸ்டாலினுடன், வேணுகோபால், சிங் தியோ ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்தனர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சொல்லி அனுப்பிய தகவல்களை, ஸ்டாலினிடம் வேணுகோபால் தெரிவித்தார். இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. கூட்டணி கட்சிகளுடன் பேச, தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு தலைமையில் ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் நேற்று முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களை அழைத்துப் பேசினர். அதன் தொடர்ச்சியாக, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். காங்கிரசுக்கு இதுவரை அழைப்பு விடப்படாத நிலையில், சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை, வேணுகோபால் சந்தித்துப் பேசி உள்ளார்.
இந்த சந்திப்பின் போது நடந்த பேச்சு குறித்த எந்த தகவல்களையும் இரு தரப்பும் வெளியிடவில்லை.
