பொதுவாக எந்த ஒரு செய்தி சேகரித்தாலும் அவசரப்பட்டு Flash செய்யக் கூடாது. பொறுமையுடன் செய்தி உண்மைதானா என அலசி

பொதுவாக எந்த ஒரு செய்தி சேகரித்தாலும் அவசரப்பட்டு Flash செய்யக் கூடாது. பொறுமையுடன் செய்தி உண்மைதானா என அலசி ஆய்ந்த பிறகே அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக நீதிமன்ற விவகாரங்களில் பொறுமை அதிகம் தேவை. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் கேமரா முன் நின்று தடுமாற வேண்டியிருக்கும்.

அத்தோடு நீதிபதிகள் முழு தீர்ப்பையும் வாசித்து முடிக்கும் வரை அமைதி காப்பது நலம். தீர்ப்பு சொல்லி முடிப்பதற்கு முன்பாக செய்தி Flash செய்தால் சில சமயம் தவறு உண்டாக வாய்ப்புண்டு. இப்படி அவரசர அவசரமா அள்ளித் தெளித்த கோலம் போல ஒரு நிகழ்வு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அது தான் இந்த விவகாரம்.

முத்தலாக் வழக்கு ஆரம்பம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷயரா பானுவிற்கும் ரிஸ்வான் அகமதுவிற்கும் ஏப்ரல் 2002ல் திருமணம் நடைபெற்றது. தன்னிடம் அதிக வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஷயரா குற்றம் சாட்டினார். அக்டோபர் 2015ல் தலாக், தலாக், தலாக் என மூன்று முறை சொல்லி தன் மனைவி ஷயராவை விவாகரத்து செய்தார் ரிஸ்வான். இஸ்லாமிய சமுதாயத்தில் இந்த முத்தலாக் முறை விவாகரத்து உண்டு. இந்த விவாகரத்திற்கு மனைவியின் அனுமதி தேவையில்லை. இந்த முத்தலாக் முறை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி பிப்ரவரி 2016ல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் ஷயரா பானு.

தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹிங்டன் நாரிமன், உதவ் யு லலித், அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. சமத்துவம் மற்றும் வாழ்வாதார உரிமைக்கு எதிராக உள்ளது முத்தலாக். அதோடு, இது பெண்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறது என தன் வக்கீல் மூலம் வாதிட்டார். மத்திய அரசும் வேறு சில அமைப்புகளும் முத்தலாக் சட்டவிரோதம் என ஷயரா பானுவிற்கு ஆதரவாக வாதிட்டன.

முத்தலாக் மூலம் விவாகரத்து வழங்கும் நடைமுறையை வன்மையாக கண்டனம் செய்கிறோம் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் சொன்னது. அதே சமயம், ‘இந்த விவகாரத்தில் கோர்ட் தலையிடக்கூடாது. காரணம் இந்த நடைமுறைகள் இஸ்லாத்திற்கு அவசியம். இந்த நடைமுறை மத சுதந்திர உரிமையால் பாதுகாக்கப்படுகிறது’ என வாதிட்டது முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம். மே மாதம் 2017ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்பாடுகள் தயார்

ஆகஸ்ட் 22ம், 2017 அன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு என 21ம் தேதி உச்சநீதிமன்ற வெப் சைட்டில் தெரிவிக்கப்பட்டது. உடனே எங்கள் டிவி பரபரப்பானது. தீர்ப்பு வரும் போது விவாதம் நடத்த வேண்டும். அதற்கு யார் யாரை அழைப்பது என ஒரு லிஸ்ட் தயாரானது. மக்களிடையே பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தக்கூடிய எந்த தீர்ப்பாக இருந்தாலும், அதனுடைய பின்புலம் என்ன என்பதைப் பற்றி தீர்ப்பு வருவதற்கு முதல் நாள் இரவு செய்தி ஒளிபரப்பப்படும்.

அதே போல இந்த முத்தலாக் தீர்ப்பிற்கும் ஒரு ஸ்டோரி தயாரானது. இந்த வழக்கு எப்படி உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது? யார் யார் என்ன வாதாடினார்கள் என விலாவாரியாக ஒரு ஸ்டோரியை எழுதினேன். உடனே அது எடிட் செய்யப்பட்டு 21ம் தேதி இரவிலிருந்து ஒளிபரப்பப்பட்டது. மறுநாள் காலை தீர்ப்பு வரும் வரை இந்த செய்தி காண்பிக்கப்படும்.

வந்தது தீர்ப்பு

உச்ச நீதிமன்ற வளாகத்தில் கேமராக்கள், நிருபர்கள் என ஏகப்பட்ட கூட்டம். அதோடு நேரலைக்கான உபகரணங்களும் அணி வகுத்தன. நான் காலை 8.30 மணிக்கே வந்துவிட்டேன். 9 மணியிலிருந்து நேரலையில் இந்த வழக்கு குறித்த தகவல்களை விவரமாக சொல்லிக்கொண்டிருந்தேன். 10 மணி லைவ்விற்கு பிறகு கோர்ட்டிற்குள் சென்றுவிட்டேன்.

தீர்ப்பு வந்த அடுத்த 5வது நிமிடத்தில் உச்ச நீதிமன்ற புல்வெளி முன் கேமரா முன் நான் நின்று தீர்ப்பு குறித்து லைவ் ஆக பேச வேண்டும் என அலுவலகத்திலிருந்து கட்டளை. தலைமை நீதிபதி அமரும் கோர்ட் எண் 1ல் தீர்ப்பு. பார்வையாளர் அமரும் பகுதியில் ஒரே கூட்டம். வக்கீல்கள் அமரும் பகுதியும் நிரம்பியிருந்தது. தலைமை நீதிபதி அமரும் கோர்ட் எண் 1ல் மூன்று வாயில்கள். நடுவில் உள்ள வாயில் வழியாக வக்கீல்கள்.

இடது மற்றும் வலது பக்க வாசல்கள் வழியாக பார்வையாளர்கள் செல்லலாம். நானும் என்னுடன் பணியாற்றும் ஹிந்தி நிருபர் ஆஷிஷ் பார்கவும் இடது வாசல் வழியாக சென்று பார்வையாளர்கள் அமரும் பகுதியில் சென்று ஒரு ஓரமாக நின்று கொண்டோம். வக்கீல்கள் அமரும் இடமும் பார்வையாளர் பகுதியும் மரச்சட்டத்தால் பிரிக்கப்பட்டிருந்தது. நீதிபதிகள் முன் மைக் இருந்தாலும், முன்பு கட்டுரையில் சொன்னது போல அது பாதி நேரம் ஆப் செய்யப்பட்டிருக்கும்.

காலை 10.30 மணி

தலைமை நீதிபதி முதலில் வர, அவர் பின்னால் சீனியாரிட்டிக்கு ஏற்றவாறு மற்ற 4 நீதிபதிகளும் உள்ளே வந்து அமர்ந்தனர். நீதிபதிகள் உள்ளே வர கோர்ட் அறைக்கு பின்னால் வழி உள்ளது. கோர்ட் மாஸ்டர் ஒரு பெரிய கவரைப் பிரித்து உள்ளே இருந்த தீர்ப்பை எடுத்து தலைமை நீதிபதியிடம் கொடுத்தார். அவர் தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார்.

குழப்பம்

எங்கள் மொபைல்போன்களை சைலண்ட் மோடில் கோர்ட்டிற்குள் எடுத்து செல்லும் வசதி அப்போது வந்துவிட்டது. நானும் ஆஷிஷும் மொபைல்போனை தயாராக கையில் வைத்து ஆபீஸ் வாட்ஸ் அப் குரூப்பில் செய்தி பகிர தயாராக இருந்தோம். “முத்தலாக் செல்லாது என பார்லிமெண்ட் சட்டம் கொண்டு வர வேண்டும்…”

இதை நீதிபதி படித்ததுமே நிருபர்கள் உடனே வாட்ஸ் அப்பில் Flash செய்தி அனுப்பினார்கள். அதோடு, உடனே தங்கள் சேனல்களில் நேரடி ரிப்போர்ட்டிங் செய்ய கோர்ட்டை விட்டு வெளியேறி புல்வெளிக்கு சென்றுவிட்டனர்.



கோர்ட்டிற்குள் சலசலப்பு.

தலைமை நீதிபதி மேலும் படித்தார். “அடுத்த 6 மாதங்களுக்கு முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வது செல்லாது. ஒரு வேளை இந்த 6 மாதங்களுக்குள் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் இந்த தடை நீக்கப்படும்” என்றார் தலைமை நீதிபதி. ‘6 மாதத்திற்குள் பார்லிமென்ட் சட்டம் இயற்ற வேண்டும்’ என நானும் ஆஷிஷும் வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் செய்தி அனுப்பிவிட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே இருந்தோம்.

அதற்குள் ஆபிசிலிருந்து தொடர்ந்து போன் மற்றும் வாட்ஸ் அப் மெசேஜ். ‘சீக்கிரம் கேமரா முன் வந்து நில்’ என்று. ‘அவசரப்பட வேண்டாம்… இன்னும் தீர்ப்பு முழுவதுமாக வாசிக்கப்படவில்லை’ என மெசேஜ் அனுப்பினேன். ”மற்ற சேனல்களில் லைவ் செய்கின்றனர்… நம் சேனலில்தான் எதுவும் இல்லை…,” என நியூஸ் டெஸ்க்கிலிருந்து பதில். நான் பதில் எதுவும் போடவில்லை. நான், ஆஷிஷ் தவிர டிவி சேனல் நிருபர்கள் யாரும் கோர்ட்டில் இல்லை. அவர்கள் வெளியே நேரலையில் தீர்ப்பைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தனர்.

எல்லாம் மாறிப்போனது

தீர்ப்பை படித்து முடித்த தலைமை நீதிபதி ஜெக்தீஷ் சிங் கெஹர் கடைசியில், ”நான் படித்தது மெஜாரிட்டி தீர்ப்பு அல்ல, மைனாரிடி தீர்ப்பு,” என்று கூறி விட்டார். கோர்ட் அறைக்குள் பலத்த சலசலப்பு. அப்படியானால் தலைமை நீதிபதி படித்தது இறுதி தீர்ப்பு அல்ல. இது தெரியாமல் டிவி நிருபர்கள் வெளியே சென்று செய்தியை Flash செய்துவிட்டனர்.

தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீரும் இந்த மைனாரிட்டி தீர்ப்பை அளித்திருந்தனர். அடுத்து நீதிபதி குரியன் ஜோசப் தன் தீர்ப்பை சொன்னார். “ நாங்கள் மூன்று பேரும் முத்தலாக் என்பது சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பளித்துள்ளோம். நான் தனியாக தீர்ப்பு எழுதியுள்ளேன்…மற்ற இரண்டு நீதிபதிகளும் ஒரு தீர்ப்பு எழுதியுள்ளனர்” என்றார், குரியன் ஜோசப்.

நானும் ஆஷுஷும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டோம். உடனே செய்தி அனுப்பினோம். ‘முத்தலாக் சட்டத்திற்கு புறம்பானது:-உச்ச நீதிமன்றம் தீர்ப்பு’ என்ற எங்கள் செய்தி, அடுத்த இரண்டு வினாடியில் Flash ஆனது. 5 நீதிபதிகளில் 3 பேர் முத்தலாக் செல்லாது என சொன்னதால் மெஜாரிட்டி தீர்ப்புதான் இறுதியானது.

அதிர்ச்சியில் மற்ற நிருபர்களும் சேனல்களும்

மற்ற சேனல்களில் 6 மாதங்களுக்குள் முத்தலாக் குறித்து சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவு என செய்தி Flash ஆகிக்கொண்டிருக்க, என்.டி.டி.வி.,யில் மட்டும், ‘முத்தலாக் மூலம் இனிமேல் விவாகரத்து கொடுக்க முடியாது. அது சட்டத்திற்கு எதிரானது’ என செய்தி போய்க்கொண்டிருந்தது. இதைப் பார்த்து மற்ற சேனல் செய்தி ஆசிரியர்கள், அவர்களுடைய நிருபர்களுக்கு போன் செய்ய ஆரம்பித்தனர்.

இதற்கிடையே நான் கேமரா முன் நின்று இறுதி தீர்ப்பு குறித்து விளக்கமாக பேசிக்கொண்டிருந்தேன். பக்கத்தில் நின்றிருந்த நிருபர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

என் நேரலை முடிந்ததும், முழு தீர்ப்பு விவரத்தை அவர்களுக்கு எடுத்து சொன்னேன். பிறகு அவர்களும் செய்தியை மாற்றி போட்டனர்.

இப்படி மெஜாரிட்டி, மைனாரிட்டி தீர்ப்பு இருக்குமானால் தீர்ப்பு விவரங்களைப் படிப்பதற்கு முன், நீதிபதி தன் தீர்ப்பு மெஜாரிட்டியா அல்லது மைனாரிட்டியா என முதலிலேயே சொல்லிவிடுவார். ஆனால் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அவ்வாறு சொல்லவில்லை. இதனால்தான் குழப்பம். சில நிருபர்களும் தவறான செய்தி வெளியிட வழி வகுத்தது. தீர்ப்பை முழுவதுமாக கேட்காமல் அவசர அவசரமாக செய்தி அனுப்பினால் என்னாகும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பாடம்.

– அ.வைத்தியநாதன்

Image 1540000

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

தொடர்புக்கு: va****@*******ar.in

இந்த தொடரின் அடுத்த கட்டுரை, பிப்.,26ம் தேதி காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) தினமலர் இணையதளத்தில் வெளியாகும்.

Source link