ஓசூர்: ஓசூரில், உதவி தொழிலாளர் ஆய்வாளரை, காரை ஏற்றி கொலை செய்த தி.மு.க., நிர்வாகியின் மகனை, போலீசார் கைது

ஓசூர்: ஓசூரில், உதவி தொழிலாளர் ஆய்வாளரை, காரை ஏற்றி கொலை செய்த தி.மு.க., நிர்வாகியின் மகனை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கும்பாரபேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்; தி.மு.க., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை செயலர். இவரது மகன் ஆதித்யா, 24. நேற்று மாலை 6:30 மணிக்கு, ஓசூர், ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு பின்னால் உள்ள அன்னை அரவிந்த் நகரில், நண்பர்களுடன், ‘டொயோட்டா பார்ச்சூனர்’ காரில் ஆதித்யா சென்றார். அப்பகுதியில் வசிக்கும், ஓசூர் உதவி தொழிலாளர் ஆய்வாளர் சிவமூர்த்தி, 54, வீட்டின் முன் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு ஆதித்யா தொடர்ந்து ‘ஹாரன்’ அடித்துள்ளார்.

சத்தம் கேட்டு சிவமூர்த்தி, அவரது மகன் கிருபாகரன், 35, மரு மகள் அம்சவேணி, 30, உள்ளிட்டோர் வெளியே வந்தனர். வாகனத்தை எடுக்க முயன்றபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆதித்யா, சிவமூர்த்தி, கிருபாகரன், அம்சவேணி மீது காரில் மோதினார். இதில், காருக்கு அடியில் சிக்கிய சிவமூர்த்தி பலத்த காயமடைந்தார். அம்சவேணி, கிருபாகரனும் காயம் அடைந்தனர். மூவரும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனாலும், வழியிலேயே சிவமூர்த்தி உயிரிழந்தார்.

ஆதித்யா, தி.மு.க., நிர்வாகியின் மகன் என்பதால், விசாரணையை தீவிரப் படுத்தாமல் போலீசார் மெத்தனம் காட்டினர். ஓசூர் அரசு மருத்துவம னையில் திரண்ட சிவமூர்த் திக்கு நெருக்கமான சிலர், போலீசாரை மொபைல்போனில் வீடியோ எடுத்தனர். அவர்களை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கொலை சம்பவம், அப்பகுதி, ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே, ஆதித்யாவை நேற்று இரவு ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

Source link