‛உங்களுடன் ஸ்டாலின்' முகாமிலும் லஞ்சம்!

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, ‘லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் ‘தினமலர்’ இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:

பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்:

மதுரையில், மனைவி பெயரில் உள்ள நிலத்துக்கு பட்டா கோரி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனு அளித்தேன். 2025 செப்., மாதத்தில் தற்காலிக சர்வேயர்கள் இரண்டு பேர் நிலத்தை அளந்து பார்த்தனர். நில பத்திரம், வில்லங்க சான்று, மூலப்பத்திர நகல் பெற்றுச் சென்றனர்; நடவடிக்கை இல்லை. பின், வேறு சர்வேயர் வந்து, நிலத்தை அளக்க வந்தார். ஏற்கனவே அளந்த விவரம் கூறினேன். சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களுக்குத் தெரியாது எனக் கூறிவிட்டதாக, புதிய சர்வேயர் கூறினார்.

நான் கடந்த ஜன.,யில் திரும்பவும் நிலத்தைக் காட்டி, உரிய ஆவணங்களைக் கொடுத்தேன். அப்போதே, ‘வேலை முடிந்தால் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்’ என வலியுறுத்தி விட்டு அவர் சென்றார். இந்நிலையில், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், ‘தங்களது உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பம் (விண்ணப்ப எண்), திருப்பரங்குன்றம் வட்டாட்சியரால் (தேதி குறிப்பிட்டு) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தங்களது நில உரிமை ஆவணத்தை, http://eservices.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என குறிப்பிட்டிருந்தது.

ஆனால், பட்டா தரவிறக்கம் செய்ய முடியவில்லை. இரண்டாவதாக அளந்த சர்வேயர் என்னிடம் ‘பணம் பறிக்க’ முயன்றார். அவரே போன் செய்து வரவழைத்தார். சென்றபோது, பட்டாவைக் கொடுத்து, “உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்’ என்று கேட்டார். ‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுத்ததுதானே. இதற்குமா லஞ்சம்’ எனக் கேட்டேன். அவர் பணம் பறிப்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

ரொக்கம் இல்லை, ஜி பே செய்யட்டுமா எனக் கேட்டபோது, வேறு ஒருவரின் நம்பர் கொடுத்து, அவருக்கு அனுப்பச் சொன்னார். வேறு வழியின்றி ரூ.2,000 அனுப்பினேன். அரசு திட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதிகாரிகள் பணம் பறிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.

தொடரும்…

Image 1539997

Source link