சென்னை: மத்திய அரசு வழங்கிய, பட்டியலின மக்களுக்கான சிறப்பு திட்ட நிதியை, தி.மு.க., அரசு, மகளிர் உரிமைத் தொகை வழங்க பயன்படுத்தியதாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையரகத்தில், தலித் விடுதலை இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, அதன் தலைவர் கருப்பையா அளித்துள்ள மனு: மகளிர் உரிமைத் தொகையாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், 2023ல் துவக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென தமிழக அரசு தனியாக நிதி ஒதுக்காமல், பட்டியல், பழங்குடியின மக்களுக்காக, மத்திய அரசு வழங்கிய சிறப்பு உட்கூறு திட்ட நிதியை பயன்படுத்தி உள்ளது.
அதன்படி, சமூக பாதுகாப்பு மற்றும் நலத் துறை என்ற தலைப்பில், எஸ்.சி., – எஸ்.டி., சிறப்பு உட்கூறு திட்ட நிதியை, மகளிர் உரிமைத் தொகை என்ற துணை தலைப்பின் கீழ் மடைமாற்றம் செய்துள்ளனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிமான தொகை, இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. அதனால், பட்டியல், பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களில், எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
எனவே, எஸ்.சி., – எஸ்.டி., மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு வழங்கிய நிதியை, இவ்வாறு மடைமாற்றம் செய்துள்ள அதிகாரிகள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
