சேமிப்பு, கடன்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

புதுடில்லி: வங்கிகள், முதன்மைப்பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.

டில்லியில் இன்று (பிப்ரவரி23) ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

வங்கிகள், கமிஷன் வருமானத்திற்காக இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட் விற்பனையில் அதிக முனைப்பு காட்டுவதை நிறுத்திவிட்டு, சேமிப்பு கணக்குகள் மற்றும் கடன்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் ‘தவறான விற்பனை’ இப்போது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது.வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களைக் காப்பீடு வாங்க வற்புறுத்துவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

பிப்ரவரி 11 அன்று, ரிசர்வ் வங்கி தவறான விற்பனை குறித்த வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது, அதில் ஜூலை 1, முதல் அமலுக்கு வரவுள்ள ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு வழிகாட்டுதல்கள், தவறான விற்பனை நிரூபிக்கப்பட்டால் தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்காக வாடிக்கையாளர் செலுத்திய முழுத் தொகையையும் வங்கிகள் திருப்பித் தர வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி தவறான விற்பனையால் ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கும் வாடிக்கையாளருக்கு ஈடுசெய்ய வேண்டும் என்றும் கூறியது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க மார்ச் 4 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Source link