வெஸ்ட் இண்டீஸ் அணி 'சிக்சர்' மழை * ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது

மும்பை: ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 107 ரன்னில் இமாலய வெற்றி பெற்றது. சிக்சர் மழை பொழிந்த ஹெட்மயர், பாவெல் அரைசதம் கடந்தனர்.

இந்தியாவின் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான ‘சூப்பர்-8’ போட்டியில் (பிரிவு-1) வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

‘லக்கி’ ஹெட்மயர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங், ஷாய் ஹோப் ஜோடி துவக்கம் தந்தது. ரிச்சர்டு, முசரபானி வீசிய முதல் 2 ஓவரில் 4, 3 என 7 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. ரிச்சர்டு வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்த பிரண்டன் கிங், 9 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஹெட்மயர், முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார்.

மறுபக்கம் ஹோப் 14 ரன்னில், ஈவன்ஸ் பந்தில் வீழ்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி ‘பவர் பிளே’ ஓவர் முடிவில் 55/2 ரன் எடுத்தது.

சிக்சர் மழை

9 ரன் எடுத்த ஹெட்மயர், முசரபானி பந்தில் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை, டஷிங்கா நழுவவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திய இவர், சிக்கந்தர் ராசா வீசிய 8வது ஓவரில் 3 சிக்சர் அடிக்க, 20 ரன் கிடைத்தது. இவர், 19 பந்தில் அரைசதம் கடந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 115/2 ரன் குவித்தது. ஹெட்மயர் 70 ரன் எடுத்த போது கொடுத்த வாய்ப்பை, மீண்டும் டஷிங்கா நழுவவிட்டார்.

பாவெல் அரைசதம்

மையர்ஸ், ஈவன்ஸ் பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய பாவெல் (29 பந்து), தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார். ‘டி-20’ உலக தொடரில் முதல், ஒட்டுமொத்தமாக 10 வது அரைசதம் ஆனது. ஹெட்மயர், பாவெல் ஜோடி 52 பந்தில் 122 ரன் குவித்தது. இந்நிலையில் ஹெட்மயர் (34 பந்தில் 85 ரன், 7X6, 7X4), கிரீமர் பந்தில், பென்னெட்டிடம் ‘பிடி’ கொடுத்தார். சிறிது நேரத்தில் பாவெல் (59 ரன், 4X6, 4X4), முசரபானி பந்தில் அவுட்டானார்.

முசரபானி வீசிய ஓவரில் (17) ரூதர்போர்டு தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவரில் 208/4 ரன் எடுத்தது. ‘டி-20’ உலக தொடரில் 4வது முறையாக 200 ரன்னுக்கும் மேல் எடுத்தது.

கடைசி நேரத்தில் ஷெப்பர்டு (21), ஹோல்டர் (13) வேகமாக ரன் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 254/6 ரன் குவித்தது. ரூதர்போர்டு (31), போர்டே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

சரிந்த பேட்டிங்

இமாலய இலக்கை ‘சேஸ்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மருமானி (14), பென்னெட் (5), பர்ல் (0) விரைவில் திரும்பினர். மையர்ஸ் 28, சிக்கந்தர் ராசா 27 ரன் எடுத்தனர். ஈவன்ஸ் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே அணி 17.4 ஓவரில் 147 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

முதலிடம்

‘டி-20’ உலக கோப்பை அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் (17) விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை சக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனுடன் (2024, எதிர்: ஆப்கன்) பகிர்ந்து கொண்டார் ஹெட்மயர்.

* ‘டி-20’ உலக கோப்பையில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் (19) அடித்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை நெதர்லாந்துடன் (எதிர்: அயர்லாந்து, 2014) பகிர்ந்து கொண்டது வெஸ்ட் இண்டீஸ்.

19 பந்து

‘டி-20’ உலக கோப்பை தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் ஹெட்மயர் (19 பந்து). முன்னதாக, நடப்பு தொடரில் ஹெட்மயர், 22 பந்தில் அரைசதம் (எதிர்-ஸ்காட்லாந்து) அடித்து இருந்தார்.

* தவிர, இத்தொடரில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர் வரிசையில் முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் (எதிர்-நியூசிலாந்து), இலங்கையின் ஷானகாவுடன் (எதிர்-கனடா) பகிர்ந்து கொண்டார். மூவரும் தலா 19 பந்தில் அரைசதம் அடித்தனர்.

122 ரன்

ஹெட்மயர், பாவெல் இணைந்து நேற்று 122 ரன் சேர்த்தனர். ‘டி-20’ உலக அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக, எந்த ஒரு விக்கெட்டுக்கும் 100 ரன்னுக்கும் மேல் சேர்த்த 4வது ஜோடி ஆனது.

* முன்னதாக கெய்ல்-ஸ்மித் (145, 2007, எதிர்-தெ.ஆப்.,), கெய்ல்-பிளட்சர் (133, 2009, ஆஸி.,), கெய்ல்-சார்லஸ் (103, 2012) ஜோடி இதுபோல ரன் சேர்த்தது.

254 ரன்

நேற்று 254/6 ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ‘டி-20’ உலக கோப்பை தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி. முன்னதாக 218/5 ரன் (எதிர்-ஆப்கன், 2024) எடுத்ததே அதிகம்.

* ஒட்டுமொத்த ‘டி-20’ உலக அரங்கில் இது இரண்டாவது (254/6) சிறந்த ஸ்கோர் ஆனது. முதலிடத்தில் இலங்கை எடுத்த 260/6 ரன் (2007, கென்யா) உள்ளது.

கட்டியணைத்த பாவெல்

நேற்று சிக்சந்தர் ராசா (15.3 வது ஓவர்) வீசிய பந்தை வேகமாக அடித்தார் பாவெல். இதை தடுக்க முயன்ற ராசாவின் இடது உள்ளங்கையில் பலமாக தாக்கியது. வேகமாக ஓடிச் சென்ற பாவெல், ராசாவிடம் நலம் விசாரித்தார். பின், இடது கை விரல்களில் கட்டுப் போட்டுக்கு கொண்ட பவுலிங் செய்யத் தயாரானார். இவரை கட்டியணைத்து ஆறுதல் தந்தார் பாவெல்.

இங்கி.,-பாக்., பலப்பரீட்சை

பல்லேகெலே: ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ சுற்று, ‘பி’ பிரிவில் இன்று இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி, ஏற்கனவே அதிக ரன்ரேட்டில் (2.550) உள்ளது. இன்று வென்றால், 4 புள்ளியுடன் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

பாகிஸ்தானை பொறுத்தவரையில் முதல் போட்டி மழையால் ரத்தானதால், 1 புள்ளியுடன் உள்ளது. இன்று இங்கிலாந்து, அடுத்து இலங்கையை (பிப். 28) வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை இன்று தோற்றால், அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படலாம். ஆடுகளம் சுழலுக்கு ஏற்றது.

பாகிஸ்தானின் தரப்பில் உஸ்மான் தாரிக், சைம் அயுப், அப்ரார் அகமது, ஷாதப் கான் என பலரும் சுழலில் கைகொடுக்கலாம்.

Source link