ஏ.டி.எம்., வழியே ரேஷன் பொருட்கள் விரைவில் நாடு முழுதும் அமல்

சென்னை: பொது வினியோக திட்டத்தில், வெளிப்படைத் தன்மையை பின்பற்ற, ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுப்பது போல், ரேஷன் பொருட்களை பெறும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எடை குறைவு, கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, கடை ஊழியர்கள் எடுத்துக் கொள்வது உள்ளிட்ட முறை கேடுகள் நடக்கின்றன.

குஜராத்

இவற்றை தடுக்க, ‘டிஜிட்டல்’ முறையில், உணவுப் பொருட்களை வாங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக, இத்திட்டம் குஜராத் மாநிலத்தில், சில மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு தரப்பில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான கூப்பன், சம்பந்தப்பட்ட நபர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

அவர் ரேஷன் கடைக்கு சென்று, தனது மொபைல் போனுக்கு வந்த கூப்பனை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம்.

இது தவிர, மக்கள் 24 மணி நேரமும், பொருட்கள் வாங்க வசதியாக, ஏ.டி.எம்., இயந்திரம் போல், ‘அன்னபூர்ணா’ என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ரேஷன் பொருட்கள், பாக்கெட்டில் வைக்கப்படும்.

இயந்திரத்தில் கருவிழி, விரல் ரேகை போன்றவற்றை பதிவு செய்து, பொருட்களை எடுக்க அனுமதிக்கப்படும்.

இயந்திரத்தில், ‘கியூ.ஆர்.,கோடு’ குறியீடு இருக்கும். அதை பயன்படுத்தியும் பொருட்களை வாங்க முடியும். இந்த இயந்திரத்தில், 35 வினாடிகளில், 25 கிலோ பொருட்களை பெற முடியும். இத்திட்டம் விரைவில், நாடு முழுதும் நடைமுறைக்கு வர உள்ளது.

வரவேற்பு

இதுகுறித்து, மத்திய உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குஜராத்தில் துவக்கப்பட்ட திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தானியங்கி இயந்திரத்தில், 5 கிலோ பாக்கெட்டில், அரிசி, கோதுமை இருக்கும். அதை டிஜிட்டல் முறையில் பெறலாம்.

இதனால் தரம், துல்லியமான அளவு, வெளிப்படையான வினியோகம் ஆகியவை உறுதி செய்யப்படும்.

விரைவில், நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும், இரண்டு அல்லது மூன்று ஏ.டி.எம்., மையங்களில் பொருட்கள் வழங்கும் வசதியை அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இத்திட்டத்தில், ரேஷன் பொருட்கள் வாங்குவோர், வாங்காதோர் யார் என்பதை துல்லியமாக அறிய முடியும்.

அனைத்து செயல்பாடுகளும், கணினி முறையில் கண்காணிக்கப்படுவதால் முறைகேடுகள் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link