தமிழகத்தில் நுழைந்த பயங்கரவாதிகளுக்கு லஷ்கர் அமைப்புடன் நேரடி தொடர்பு

புதுடில்லி: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைதான வங்கதேசத்தினர் 8 பேரை மூளைச்சலவை செய்து இயக்கிய நபர், பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் மூத்த தளபதி ஜாகி – உர் – ரஹ்மான் லக்வியுடன் நேரடி தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுஉள்ளது.

மத்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சயீத் மற்றும் லக்வி ஆகியோர் ‘சாச்சா ஜி’ எனவும், ‘தாயா ஜி’ எனவும் பயங்கரவாத அமைப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில், பயங்கரவாத அமைப்புகளில் பயிற்சி பெற்ற நபர்களை, தற்போது நம் நாட்டிற்குள் மூளைச்சலவை செய்து அனுப்பும் பணியில், வங்கதேசத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷபீர் அகமது லோன் ஈடுபட்டுள்ளார்.

நிதி உதவி

இவர், டில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மற்றும் 2008 மும்பை தாக்குதல் சம்பவங்களுடனும் தொடர்பு உடையவர்.

இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக, டில்லியில் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டிய இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர்.

அவர்களுக்கும், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைதான வங்கதேசத்தினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

நம் நாட்டில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, வங்கதேசத்தினரை அமைப்பில் சேர்க்கும் பணியில் ஷபீர் அகமது லோன் ஈடுபட்டுள்ளார். இதற்கு பாக்., உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ., நிதி உதவி அளித்துள்ளது.

நம் நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும் அவர்கள், ‘ஸ்லீப்பர் செல்கள்’ போல் லோனின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு வந்ததையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.


விசாரணை

மேற்கு வங்கத்தில் கைதான நபர், லோனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், தாக்குதலுக்கு முன் தமிழகத்தில் கைதான ஆறு பேரையும் கொல்கட்டாவிற்கு வரவழைக்கும் பணியில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன் குழுக்களுடன் தொடர்பில் இருக்க, ‘வாட்ஸாப், சிக்னல்’ போன்ற செயலியை பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டு உள்ளது.

தலைமறைவாக உள்ள லோனை, டில்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கண்காணிப்பு தீவிரம்

தமிழகத்தின் திருப்பூரில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினருக்கு பாக்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த நபர்களின் விபரங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக போலீசார் கூறியதாவது: பயங்கரவாத அமைப்பு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரும், உள்ளூரில் வசிக்க தங்களுக்கு தேவையான ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு போன்ற அனைத்தையும் வைத்துள்ளனர். இவை அனைத்தையும் மேற்கு வங்கத்தில், 1,000 முதல், 5,000 ரூபாய் வரை செலவு செய்து வாங்கியுள்ளனர். சமீபகாலமாக போலீஸ் கெடுபிடி இருந்தும், இவர்கள் சிக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம், தங்களை பற்றிய விபரங்களை, வேறு நபர்களி டம் பகிர்ந்து கொள்ளாமல், தனிமையாக இருந்தனர். வங்கதேசத்தினர் குறித்து விசாரிக்கும் போது, வடமாநிலத்தவர் போல் காட்டிக்கொண்டு இயல்பாக இருந்தனர். கைது செய்யப்பட்டிருப்போர், திருப்பூரில் இருந்து பலமுறை வங்கதேசத்துக்கு சென்று பத்திரமாக திரும்பி உள்ளனர். இவர்களைப் போல, வங்கதேசத்தைச் சேர்ந்த பலர் இருக்கக்கூடும். அவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link