மும்பை,:தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான மோசடி நடவடிக்கைகளை தொடரலாம் என்று வங்கிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
நடவடிக்கை எடுக்க நீதிபதி மிலிந்த் ஜாதவ் 2025 டிச. 24ல் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.
இதுகுறித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘அனில் அம்பானிக்கு எதிரான விசாரணை நடவடிக்கைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவு, சட்டவிரோதமானது. அதற்கு எதிரான மேல்முறையீடு மீது தீர்ப்பை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அனில் அம்பானி தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவ்வாறு நிறுத்தி வைப்பது சட்டவிரோதத்தை தொடர செய்யும்’ என கூறப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கிய அனில் அம்பானியின் ஆர்.காம்., நிறுவனம், 49,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் நிலுவையுடன், 2019ல் திவாலானதாக அறிவித்தது.
அதையடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., வங்கி, இந்திய ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் கூட்டணி மற்றும் தணிக்கை நிறுவனமான பி.டி.ஓ., இந்தியா ஆகியவை அனில் அம்பானிக்கு எதிரான மோசடி நடவடிக்கைகளை து வங்கின.
இதை எதிர்த்து, அனில் அம்பானி தரப்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
