பிரெஸ்ஸல்ஸ்: அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து,

பிரெஸ்ஸல்ஸ்: அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு ஐரோப்பிய யூனியன் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐரோப்பிய கமிஷன் இதுகுறித்து கூறியுள்ளதாவது:

அமெரிக்க உச்ச நீதிமன்றம், டிரம்ப்பின் வரி விதிப்பை ரத்து செய்து விட்டது. இருப்பினும் அதனை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், அனைத்து நாடுகளின் பொருள்களுக்கும் 10 சதவீதம் என்று கூறி விட்டு, மீண்டும் 15 சதவீத வரி என்று அறிவித்துள்ளார். ஆனால் தற்போதைய நிலை, அட்லான்டிக் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தின் நோக்கமான ‘நேர்மையான, சமமான, பரஸ்பரம் நன்மையளிக்கும்’ இலக்குக்கு வலு சேர்ப்பதாக இல்லை.

கடந்த ஆண்டு ஆக., மாதத்தில், ஐரோப்பிய யூனியன் – – அமெரிக்கா தரப்புகள் கூட்டாக இதனை அறிவித்தன. கூட்டு ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் 70 சதவீத பொருள்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்படும். மேலும், 27 உறுப்பு நாடுகளின் வர்த்தக விவகாரங்களை ஐரோப்பிய யூனியனே கவனித்து கொள்கிறது. ஒரு முறை ஒப்பந்தம் போட்டால், அதனை அமெரிக்கா மதித்தாக வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க ஐரோப்பிய யூனியனின் பார்லிமென்ட்டை வலியுறுத்த இருப்பதாக அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வரி விவகாரத்தில் அமெரிக்க தரப்பில் கடும் குழப்பம் நிலவுவதாகவும் கேள்விகளும் நிலையற்ற தன்மையும் நீடிப்பதாகவும் ஐரோப்பிய பார்லி.,யின் சர்வதேச வர்த்தக கமிட்டியின் தலைவர் பெர்ன்ட் லேங் சமூக ஊடக பதிவில் கூறியுள்ளார்.

கடந்த 2024 நிலவரப்படி அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு, 182 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

‘தீர்ப்பை வைத்து விளையாட வேண்டாம்”’ அமெரிக்க உச்சநீதிமன்றம், டிரம்ப்பின் அதீத வரிவிதிப்பை ரத்து செய்ததை அடுத்து, அந்நாட்டின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை, ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘அவசரகால பொருளாதார அதிகார சட்டத்தின்படி விதிக்கப்பட்ட வரிகளை வசூலிக்க தடை விதிக்கப்படுகிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இந்திய நேரப்படி காலை 10.30 முதல் அவ்வரி வசூல் நிறுத்தப்படும் என்று அது தெரிவித்துள்ளது. ஆனால், இச்சட்டத்தின்படி விதிக்கப்பட்ட வரிகளுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். இதற்கிடையே, ஐரோப்பிய யூனியன், ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளதை அடுத்து, டிரம்ப், ‘ட்ரூத் சோஷியல்’ ஊடகத்தில் ‘அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பை பல நாடுகள் தங்கள் விளையாட்டுக்கு பயன்படுத்துகின்றன. அவர்கள் அதிக வரியையும் மோசமான எதிர்விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று எச்சரித்துள்ளார்.

Source link