பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க உருவானது  முதல் கொள்கை!: 'பிரஹார்' என்ற பெயரில் வெளியிட்டது மத்திய அரசு

– நமது சிறப்பு நிருபர் -:

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கான நாட்டின் முதல் கொள்கையை மத்திய அரசு, வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது என்ற முழக்கத்துடன், ‘பிரஹார்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்த கொள்கையில், பயங்கரவாத நடவடிக்கைகளை முன்கூட்டியே தடுத்தல், நிதி மற்றும் ஆயுத ஆதாரங்களை ஒடுக்குதல் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அந்த கொள்கையில், பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க ஏழு முக்கிய அம் சங்கள் இடம் பெற்றுள்ளன.

பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்தல், பதிலடி தருதல், அரசு இயந்திரங்களை ஒருங்கிணைத்தல், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிப்படி நடவடிக்கை எடுத்தல், பயங்கரவாதத்திற்கான நிதி ஆதாரங்களை அழித்தல்.

சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து பயங்கரவாத செயல்களை ஒடுக்க அழுத்தம் தருதல், சமூக ஒத்துழைப்புடன் துணிச்சலுடன் செயல்படுதல் ஆகியவை, ஏழு முக்கிய அம்சங்களாக வரையறுக்கப் பட்டுள்ளன.

இதற்கு ஆங்கிலத்தில், ‘பிரஹார்’ என பெயர் சூட்டி, ஒவ்வொரு எழுத்திற்குமான முக்கியத்துவத்தையும் அரசு விளக்கியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அந்த கொள்கையில் மத்திய அரசு கடுமையாக சாடியுள்ளது.

தாக்குதல்

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நம் அண்டை நாடுகளில் சில இடங்கள் ஆளுமை இல்லாத பகுதிகளாக உள்ளன. இந்த பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகவே அறிவித்து, அதை பிற நாடுகள் மீது ஏவி வருகின்றன.

ஜாதி, மதம், நாடு, கலாசாரம் என குறிப்பிட்ட வரையறைக்குள் பயங்கரவாதத்தை இந்தியா தொடர்புபடுத்தாது. பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.

எல்லை கடந்த பயங்கரவாதத்தால் பல ஆண்டுகளாக நம் நாடு பாதிக்கப்பட்டு வருகிறது. ஜிஹாதி பயங்கரவாத அமைப்புகளும், அதன் துணை அமைப்புகளும் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடர்ந்து சதித்திட்டம் தீட்டி வருகின்றன.

அல் – குவைதா, ஐ.எஸ்., போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகள், தொடர்ந்து இந்தியா மீதே குறிவைத்து வருகின்றன. ‘சிலீப்பர் செல்கள்’ வாயிலாக நாட்டிற்குள் வன்முறையை துாண்டிவிடும் முயற்சிகளையும் எடுத்து வருகின்றன.

அன்னிய மண்ணில் இருந்து பயங்கரவாதம், மதவாதம் ஆகியவற்றை பரப்பி, நம் நாட்டில் நாசவேலைகளை நடத்த, அந்த அமைப்புகள் தொடர்ந்து சதித் திட்டம் தீட்டி வருகின்றன.

இதற்காக நவீன தொழில்நுட்பங்கள், ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றையும் அவை பயன்படுத்துகின்றன.

குறிப்பாக, பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் பயங்கரவாதத்தை விதைக்க, அந்த அமைப்புகள் முயன்று வருகின்றன.

நம் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வசதியாக, மூளைச் சலவை செய்து, ஆட்களை சேர்ப்பது, அதற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் ஆயுதங்களை திரட்டுவது என, பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து திட்டமிட்டு, நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

பயங்கரவாதத்தை பரப்ப, அதற்கான நிதிகளை திரட்ட, இந்த அமைப்புகள் சமூக வலைதளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றன.

கிரிப்டோ வாலட்கள், டார்க் வெப், சங்கேத குறி கள் மூலம், இந்த அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

நடவடிக்கை

எனவே, அவர்களது சதித்திட்டங்களை முறியடிக்க, நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். ஹேக்கர்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் நடத்தும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள, உளவுத் துறை மற்றும் பயங்கரவாத ஒழிப்பு முகமைகள் பலப்படுத்தப்படும்.

மத்திய புலனாய்வு அமைப்புகளும், மாநில போலீசாரும் பயங்கரவாத தாக்குதல்களை பகிர்ந்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில், நிகழ்நேர தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.

இதற்காக பன்முக முகமைகள் மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவும் வலையமைப்புகள் முற்றிலும் ஒழிக்கப்படும்.

வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்தி, இளைஞர்களை மூளைச்சலவை செய்வதை தடுக்க, பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, டாக்டர்கள், உளவியலாளர்கள், வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு அம்சங்கள்

‘பிரஹார்’ கொள்கையின் ஏழு அம்சங்கள்:  பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாக, உளவுத்துறை வாயிலாக கண்டுபிடித்து தடுத்தல்  தாக்குதல் நடந்தால், எதிரிகளுக்கு புரியும் மொழியில், உடனடியாக பதிலடி  அரசு இயந்திரத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே நேர்கோட்டில் இலக்கை எட்டுதல்  மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு, நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்தல்  பயங்கரவாதம் வளர்வதற்கான நிதி ஆதாரங்கள், மூளைச்சலவை செய்யும் நடவடிக்கைகளை முற்றிலும் அழித்தல்  உலக நாடுகளை ஒருங்கிணைத்து, பயங்கரவாதத்திற்கு எதிராக அழுத்தம் தருதல்  சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் பாதிப்பில் இருந்து மீண்டு, துணிச்சலாக செயலாற்றுதல்.

Source link