அபுஜா: நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழு நடத்திய தாக்குதலில், 38 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, பெண்கள், குழந்தைகள் உட்பட பலரை கடத்திச் சென்றுள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதம் ஏந்தியக் குழுக்கள், கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.
ஜாம்பரா மாகாணத்தின் துங்கன் தஸ்தே கிராமத்தில் ஆயுதமேந்திய குழு ஒன்று, நேற்று முன்தினம் இரவு கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 38 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கடத்தி செல்லப்பட்டனர். மேலும், அக்கிராமத்தில் இருந்த பல்வேறு வீடுகள், கடைகளை அக்கும்பல் தீ வைத்து கொளுத்தியது.
தாக்குதல் குறித்து அந்நாட்டு உளவுத்துறைக்கு முன்பே தகவல் கிடைத்தபோதிலும், முறையான சாலை வசதிகள் இல்லாததால் பாதுகாப்பு படையினரால் உரிய நேரத்தில் அங்கு செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு ஆப்ரிக்க யூனியன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்து உள்ளது.
நைஜீரியாவில் அதிகரித்து வரும் இத்தகைய வன்முறைகளை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவம் தன் சிறப்பு ஆலோசனை குழுவை அனுப்பியுள்ளது.
