காபூல்: ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், 12 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மற்றும் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
நேற்று முன்தினம் நள்ளிரவு நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் பக்டிகா மாகாணங்களில் உள்ள வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில், 70 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேரும் அடங்குவர்; அவர்களில், 12 பேர் குழந்தைகள்.
குப்பைகளுக்குள் சிக்கிய 23 பேரின் உடல்களை உள்ளூர் மக்கள் மீட்டெடுத்து அடக்கம் செய்துள்ளனர்.
