தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மூடப்பட்ட 300 ஜவுளி ஆலைகள்

சென்னை : ஜவுளி துறையில் தமிழகம் முன்னணியில் உள்ள போதிலும், தற்போது பல்வேறு இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருவதாக இத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 2021- – 22 முதல் 2023 – -24 காலகட்டத்தில், தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து சங்கத்தினர் கூறியதாவது:

மூலதன செலவுகள், இயக்க செலவுகள் அதிகரிப்பு, கடுமையான மின் கட்டண உயர்வு, கடனுக்கான வட்டி அதிகரிப்பு ஆகியவை காரணமாக, தமிழக ஜவுளி ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, 2021 – -22 மற்றும் 2023- – 24 ஆகிய மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டன. மத்திய ஜவுளி அமைச்சக தரவுகளின்படி, 2021 – -22 ம் ஆண்டில், தமிழகத்தில் 2,773 ஜவுளி ஆலைகள் இருந்தன. அவற்றில் 2,121 செயல்பாட்டில் இருந்தன. 2023- – 24ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 2,455 ஆக குறைந்து 1,672 ஆலைகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்ததாக தெரிகிறது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்படாமல் அகற்றப்பட்டன எனவும் ஜவுளி தொழில் பிரதிநிதிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழக ஜவுளி தொழிலை பல காரணிகள் பாதித்துள்ளன. பெரும்பாலான ஜவுளி தொழில்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் உள்ளன.

எனவே, ஆலைகள் மூடப்படுவதை தவிர்க்க, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் உத்திகள் வகுத்து ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும்.

ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டாலும், மானியங்களுக்கான உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று தொழில்துறை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Source link