சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நேற்று தங்கள் வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி பாராயணம் செய்தனர்.
கடந்த டிச., 3ம் தேதி, கார்த்திகை தீபத்தின்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபமேற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி தீபம் ஏற்ற காவல் துறை அனுமதிக்கவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறியதற்காக மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
இந்நிலையில், முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திர தினமான நேற்று, மாலை 6:00 மணிக்கு, வீடுகளில் முருகன் படத்தை வைத்து விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாடலை பாராயணம் செய்ய, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி தமிழகம் முழுதும், பல லட்சக்கணக்கானோர் வீடுகளில் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தீபமேற்றி, கந்த சஷ்டி பாராயணம் செய்தார். தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்ட நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி, ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் அவரவர் வீடுகள், கோவில்களில் தீபமேற்றி, கந்த சஷ்டி பாராயணம் செய்தனர்.
அடுத்தகட்டமாக, வரும் மார்ச் 2ம் தேதி பவுர்ணமியன்று, திருப்பரங்குன்றம் மலையில் கிரிவலம் வர வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
