ராஞ்சி:ராஞ்சியில் இருந்து டில்லி நோக்கி சென்ற தனியார் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டில்லிக்கு தனியார் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இதில் விமான பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஒரு நோயாளி என 7 பேர் பயணித்துள்ளனர்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம், சத்ரா மாவட்டம் சிமரியா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கர்மதந்த் என்ற கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. விமானத்தை தொடர்பு கொள்ள அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை.
பின்னர் அடர்வனப்பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர தேடுதல் பணிகளுக்கு பின்னர் இந்த விமானம் விபத்தில் சிக்கியதை ராஞ்சி விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்தனர். விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேரும் பலியாகினர். விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மீட்புப்படையினரும், மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் இறங்கினர்.
பலியானவர்களின் உடல்களை மீட்ட மீட்புப்படையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய முடியவில்லை. இருப்பினும், மோசமான வானிலை அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் நேற்று இரவு 7.11 மணிக்கு ராஞ்சியில் இருந்து புறப்பட்டு உள்ளது. இரவு 7.34 மணிக்கு கொல்கட்டா விமான நிலையத்தை பைலட் தொடர்பு கொண்டு வழித் தடத்தை மாற்றிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் விமானத்திலிருந்து எந்த விதமான தகவல் தொடர்பும் இல்லை. அதன் பிறகு விபத்து நேரிட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
