புதுடில்லி: கருணை, உறுதி ஆகிய பண்புகளை கொண்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. அதை முன்னிட்டு அவரை நினைவு கூரும் வகையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை தமிழில் வெளியிட்டு உள்ளார். அதில், கருணை, உறுதி ஆகிய பண்புகளை கொண்டவர் என்று பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
எக்ஸ் வலைதள பதிவின் விவரம் வருமாறு;
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.
அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார்.
கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன். அவரைப் பற்றி இந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் (2.43 வினாடிகள் கொண்டது) என்பது இங்கு இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமது எக்ஸ் வலைதள பதிவுடன் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய உரையின் தொகுப்பையும், பிரதமர் மோடி இணைத்து வெளியிட்டுள்ளார்.
