புதுடில்லி: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆட்சேபனைகளுக்கு தீர்வு காண ஒடிசா மற்றும் ஜார்க்கண்டிலிருந்து நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
கடந்த வாரம், மேற்கு வங்காளத்தில் மாவட்ட நீதிபதிகள், கூடுதல் மாவட்ட நீதிபதிகளை எஸ்ஐஆர் பணிக்காக பணியமர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், 50 லட்சம் பேருடைய முறையீடுகள் நிலுவையில் உள்ளன. ஆனால் மொத்தம் 250 நீதித்துறை அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.
ஒரு நீதிபதி ஒரு நாளைக்கு 250 வழக்குகளுக்கு முடிவை தீர்மானித்தாலும், அனைத்தையும் முடிக்க குறைந்தது 80 நாட்கள் ஆகும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடிதம் எழுதியிருந்தது. இந்த கடிதத்தை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் எடுத்துக்கொண்டது.
இது தொடர்பாக, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு விசாரணையின் போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆட்சேபனைகளுக்கு தீர்வு காண ஒடிசா மற்றும் ஜார்க்கண்டிலிருந்து நீதிபதிகளை நியமிக்க உத்தரவிட்டனர்.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள மூத்த நீதிபதிகளை எஸ்ஐஆர் பணிக்கு பயன்படுத்த பெஞ்ச் அனுமதித்தது. மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கல்யாண் பந்தோபாத்யாய், கோபால் சங்கரநாராயணன், மேனகா குருசாமி ஆகியோர் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பிற மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதாடினர்.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வங்காள மொழியில் புலமை பெறாமல் இருக்கலாம் என்ற கேள்வியை எழுப்பியபோது, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா பகுதிகள் முன்பு மேற்கு வங்கத்தின் பகுதிகளாக இருந்தன என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
