திருவனந்தபுரம்: '' ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்

திருவனந்தபுரம்: ” ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டு அவர் கவுரவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் குடியரசாக மாறுவதற்கு முன்னர் இந்தியாவின் ஒரே கவர்னர் ஜெனரலாக இருந்தவர் அவர். புதிய ஜனாதிபதி பதவியேற்க தனது பதவியை வழங்கினார்.

அவரது கொள்கைகளை கண்டு வியக்கிறேன். எனது மாணவர் பருவத்தில் , அவரின் சுதந்திர கட்சியின் ஆதரவாளர் ஆக இருந்துள்ளேன். தாராளமய பொருளாதாரம் மற்றும் சமூக நீதியுடன் இணைந்த சுதந்திரமான அமைப்புகளுக்கான அவரின் ஆதரவான கொள்கைகள் இருந்தன. இந்திய நாகரிகம் மற்றும் மதம் குறித்து ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியல் அமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அதனை இன்று வரை பின்பற்றி வருகிறேன். இன்று அவரை குறைவானவர்களே பின்பற்றுவதை கண்டு வருத்தமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் சசிதரூர் கூறியுள்ளார்.

சிலை திறப்பு

முன்னதாக, நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவரும், ‘மூதறிஞர் ராஜாஜி’ என்றழைக்கப்படும் பெருமைக்குரிய தலைவருமான, சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் மார்பளவு சிலை, ஜனாதிபதி மாளிகையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

‘ராஜாஜி உத்சவ்’ என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.

ஜனாதிபதி மாளிகையின் முக்கிய பகுதியாக கருதப்படும், அசோக மண்டபத்தின் கிராண்ட் ஓபன் படிக்கட்டிற்கு அருகே, பிரிட்டனைச் சேர்ந்த கட்டடக்கலை பொறியாளரான எட்வின் லுட்யன் என்பவரின் சிலை இருந்தது. இச்சிலை அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக, ராஜாஜியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.

Source link