சச்சினுக்கு தவறாக 'அவுட்' * பக்னர் வருத்தம்

புதுடில்லி: சச்சினுக்கு தவறாக ‘அவுட்’ கொடுத்ததற்கு, அம்பயர் ஸ்டீவ் பக்னர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர் முன்னாள் அம்பயர் ஸ்டீவ் பக்னர், 79. இவர் கையை உயர்த்தினாலே பேட்டர்களுக்கு பக்…பக் என பதட்டமாக இருக்கும். இந்தியாவின் சாதனை வீரர் சச்சினுக்கு எதிராக பல முறை சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுத்தார்.

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டின் (2003) முதல் இன்னிங்சில் சச்சினுக்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர் கில்லஸ்பி எல்.பி.டபிள்யு., கேட்டார். சற்றும் தாமதிக்காமல் அம்பயர் பக்னர் தவறாக அவுட் கொடுத்தார். ‘ரீப்ளே’வில் பந்து, ‘ஸ்டம்ப்சிற்கு’ மேலே சென்றது தெரிந்தது. இதை வர்ணனை செய்த டோனி கிரெய்க் (இங்கி.,) ‘மிகவும் சோசமான தீர்ப்பு’ என குறிப்பிட்டார். அப்போதைய கேப்டன் கங்குலி 144 ரன் எடுக்க, இப்போட்டி ‘டிரா’ ஆனது.

அடுத்து கோல்கட்டா, ஈடன் கார்டனில் நடந்த 2வது டெஸ்டில் (2005), சச்சினுக்கு எதிராக பாகிஸ்தானின் அப்துல் ரசாக் அரை மனதுடன் ‘அப்பீல்’ செய்தார். ‘கீப்பர்’ கம்ரான் அக்மல் ‘கேட்ச்’ பிடித்ததாக கூறினார். இம்முறையும் பக்னர் அவசரப்பட்டு ‘அவுட்’ கொடுத்தார். ‘ரீப்ளே’வில் பேட்டிற்கும் பந்துக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது.

தனது தவறை 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புக் கொண்ட பக்னர் கூறுகையில்,”சச்சினுக்கு எல்.பி.டபிள்யு., முறையில் ‘அவுட்’ கொடுத்தது தான் என் அம்பயர் வாழ்வின் கடினமான தீர்ப்பு. வாழ்க்கையில் தவறு நடக்கும். இந்த தவறை நான் ஒப்புக் கொள்கிறேன்,”என்றார்.

Source link