பெண்கள் 'டி-20' உலக கோப்பை * வெளியானது அட்டவணை

துபாய்: பெண்கள் ‘டி-20’ உலக கோப்பை அட்டவணை வெளியானது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான ‘டி-20’ உலக கோப்பை தொடர், இங்கிலாந்து, வேல்சில், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடக்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, தென் ஆப்ரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது. ‘பி’ பிரிவில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் உள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்றில் நடக்கும் 30 போட்டி முடிவில், பட்டியலில் ‘டாப்-2’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (ஜூன் 30, ஜூலை 2) முன்னேறும், பைனல் ஜூலை 5ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.

இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இதன் படி, இந்திய தனது முதல் போட்டியில் ஜூன் 14ல் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது. அடுத்து நெதர்லாந்து (ஜூன் 17), தென் ஆப்ரிக்கா (ஜூன் 21), வங்கதேசம் (ஜூன் 25), ஆஸ்திரேலியாவுடன் (ஜூன் 28) மோத உள்ளது.

யார் யாருடன்

இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள்:

தேதி எதிரணி இடம்

ஜூன் 14 பாகிஸ்தான் எட்ஜ்பாஸ்டன்

ஜூன் 17 நெதர்லாந்து ஹெட்டிங்லே

ஜூன் 21 தென் ஆப்ரிக்கா ஓல்டு டிரபோர்டு

ஜூன் 25 வங்கதேசம் ஓல்டு டிரபோர்டு

ஜூன் 28 ஆஸ்திரேலியா லண்டன்

* போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் துவங்கும்.

Source link