மே.வங்க எஸ்.ஐ.ஆர்., பணி: விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட் தீவிரம்!

மேற்கு வங்கத்தில் நடக்கும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான விண்ணப்பங்களை விரைந்து முடிப்பதற்காக, அண்டை மாநிலங்களான ஒடிஷா, ஜார்க்கண்டில் இருந்து நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் தமிழகத்துடன் சேர்த்து தேர்தல் நடக்கிறது. தமிழகத்தை போலவே இங்கும் எஸ்.ஐ.ஆர்., பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு ஆளும் திரிணமுல் காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

நம்பிக்கையற்ற சூழல்

மேற்கு வங்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் கமிஷன், 58 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கியிருந்தது. தொடர்ந்து, பெயரில் பிழைகள் போன்ற முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, 1.38 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

எஸ்.ஐ.ஆர்., பணியை எதிர்த்து, மேற்கு வங்க அரசு மற்றும் திரிணமுல் காங்., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

முந்தைய விசாரணையில், ‘மேற்கு வங்க அரசு – தேர்தல் கமிஷன் இடையே நம்பிக்கையற்ற சூழல் நிலவுகிறது. இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, எஸ்.ஐ.ஆர்., பணியில் மாவட்ட நீதிபதிகளை கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில், 250 மாவட்ட நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் ஒரு நாளைக்கு, 250 விண்ணப்பங்களை தீர்த்தாலும், முழு பணியையும் முடிக்க குறைந்தது, 80 நாட்கள் ஆகும்’ என, சுட்டிக் காட்டியிருந்தார்.

அடையாள சான்று

இதன்பின், அமர்வு பிறப்பித்த உத்தரவு: மேற்கு வங்க எஸ்.ஐ.ஆர்., பணியில், மாவட்ட நீதிபதிகளுடன் இணைந்து, மூன்று ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள சிவில் நீதிபதிகளையும் ஈடுபடுத்தலாம். தேவைப்பட்டால், ஜார்க்கண்ட், ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் பேசி, அங்கிருந்து நீதிபதிகளை கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உதவிக்கு அழைக்கலாம்.

இந்த நீதிபதிகளின் பயணம் மற்றும் தங்குமிடச் செலவுகளை தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். இந்த பணியில் இருக்கும் நீதிபதிகளுக்கு, மார்ச் 9 வரை எந்தவித விடுமுறையும் கொடுக்கக் கூடாது. தேர்தல் நடைமுறைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அரசியலமைப்பின், 142-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவு வழங்கப் படுகிறது.

வரும் 28ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், அதன்பின் சரிபார்க்கப்படும் பெயர்களை துணை பட்டியல்கள் மூலம் தொடர்ந்து இணைக்கலாம். வாக்காளர் அடையாள சரிபார்ப்புக்கு, ஆதார் அட்டை, பள்ளி சான்றிதழை அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

ஆதார் ஏற்கப்படும்: கோர்ட் திட்டவட்டம்

எஸ்.ஐ.ஆர்., பணியில் ஆதார் அட்டையை அடையாள சான்றாக ஏற்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், பா.ஜ., வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனு: வங்கதேச எல்லையில் உள்ள நம் நாட்டின் மாவட்டங்கள் அருகே, போலி ஆதார் அடையாள அட்டை தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம், வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா சமூகத்தினர் நம் நாட்டுக்குள் ஊடுருவுகின்றனர்.
கைதாகும் போது, அவர்களிடம் போலியான ஆதார் அட்டை இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே, ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஆதார் அட்டை உள்ளது. அதன்படியே, அதை ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது. ‘நீதிமன்றத்தை மீண்டும் மீண்டும் நாடுவதை தவிர்த்து, மத்திய அரசை நாடி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை வைக்கலாம். ‘அந்த சட்டத்தின்படி, ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என சட்டம் இருக்கும் வரை, அதை நீதிமன்றம் அங்கீகரிக்க தான் செய்யும்’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

– டில்லி சிறப்பு நிருபர் –

Source link