பாரிஸ்: ”அரசு அளித்துள்ள சம்மனுக்கு பதிலளிக்கும் வரை, அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திக்க முடியாது,” என பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் நோல் பரோட் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் தந்தையான, சார்லஸ் குஷ்னர் ஐரோப்பிய நாடான பிரான்சுக்கான அமெரிக்க துாதராக உள்ளார்.
பிரான்சின் லியோன் நகரில், 23 வயது இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை பிரான்ஸ் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது.
இதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய சார்லஸ் குஷ்னருக்கு பிரான்ஸ் வெளியுறவுத் துறை, சம்மன் விடுத்திருந்தது; ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் நோல் பரோட், ”சம்மனுக்கு மதிப்பளித்து அவர் நேரில் ஆஜராகாதவரை, பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் சந்திக்க அனுமதிக்க முடியாது,” என்றார்.
