சென்னை: “தே.ஜ., கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ.,விடம் தான் பேசும்,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
“அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்., மாளிகையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பழனிசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, கொடி ஏற்றினார்.
தொடர்ந்து, மகளிர் அணி, தென்சென்னை வட கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டி: கொரோனா காலத்தில், வரி வருவாய் இல்லாமல் சிறப்பாக ஆட்சி நடத்தினோம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வருவாயை பெருக்கி வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
வரியை உயர்த்துவோமா, இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது. நிதித்துறை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து, எந்தெந்த வழிகளில் வரிகளை உயர்த்த முடியுமோ அப்படி உயர்த்தி, நாங்கள் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவோம்.
தி.மு.க., ஆட்சியில் தமிழகம் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதை ‘வென்டிலேட்டரில்’ வைத்து, மக்களை காக்க வேண்டும். அதன்படிதான், அறிவிப்புகளை வெளியிடுகிறோம்.
நிறைய கட்சிகளை நம்பி இருப்பதால், தொகுதி பங்கீடு பேச்சை தி.மு.க., விரைவாக துவக்கி உள்ளது. நாங்கள் கூட்டணி பேச்சை முடித்துவிட்டோம். தொகுதி பங்கீடு பேச்சை விரைவில் துவக்குவோம்.
ராஜ்யசபா எம்.பி., பதவியை, யாருக்கு வழங்குவது என்பதை, அ.தி.மு.க.,வின் ஆட்சிமன்ற குழு முடிவு செய்யும். அமைச்சர் நேரு மீது, அமலாக்கத்துறை வைத்த குற்றச்சாட்டை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
தே.ஜ., கூட்டணி ஏற்கனவே அமைக்கப்பட்டது. அதில், அ.தி.மு.க., இணைந்து உள்ளது. ஏற்கனவே தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள், பா.ஜ.,விடம் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தும். அதன் அடிப்படையில், பா.ஜ.,விடம் அ.ம.மு.க., ‘சீட்’ பெறும். இதில் எந்த குழப்பமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
