ஐ.டி., துறையில் ஏற்பட்டுள்ள சரிவு, ரியல் எஸ்டேட் துறையையும் விட்டுவைக்கவில்லை. நேற்றைய பங்கு வர்த்தகத்தில், ‘நிப்டி ரியால்ட்டி’ குறியீடு கிட்டத்தட்ட 3 சதவீதம் வரை சரிந்து, 798 என்கிற புள்ளியில் நிலைபெற்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த குறியீடு 4.50 சதவீதமும்; நடப்பாண்டில் இதுவரை 9.20 சதவீதமும் சரிந்துள்ளது. நேற்று வர்த்தகத்தின் இறுதியில் ‘நிப்டி ரியால்டி’ குறியீட்டில் உள்ள 10 முன்னணி நிறுவனங்களின் பங்குகளுமே சரிவுடன் வர்த்தகமாகின.
சில வாரங்களுக்கு முன்’ஆந்த்ரோபிக்’ அறிமுகம் செய்த புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக ஐ.டி., துறையில் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என்கிற அச்சம் உருவானது. இதன் காரணமாக, சில தினங்களாக ஐ.டி., துறை சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்து வந்தன.
இந்நிலையில், நேற்றும் ‘ஐ.டி., குறியீடு’ கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்து 30,053க்கு நிலைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் இதுவரை மட்டும் 21 சதவீதம் சரிந்துள்ளது. 2008ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஐ.டி., துறையில் ஏற்பட்டுள்ள மிக மோச மான வீழ்ச்சி இதுவாகும்.
நிபுணர்களின் கருத்து
பங்குச் சந்தையில் ஐ.டி., குறியீடு வீழ்ச்சியடையும் போது, அது ஒட்டுமொத்த சந்தையின் போக்கையும் பாதித்து, அதிக ரிஸ்க் உள்ள ரியல் எஸ்டேட் துறையை முதலில் தாக்கும். இதுதான் இப்போது பங்குச்சந்தையில் நடப்பதாக தெரிகிறது.
அதனால், ரியல் எஸ்டேட் துறையின் பொற்காலம் முடிந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் ஐ.டி., துறையின் தடுமாற்றம் ரியல் எஸ்டேட் மீதான நம்பிக்கையை தளர்த்தியிருக்கிறது.
ஐடி நிறுவனங்களின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகள் குறைந்தால், அது அலுவலகங்களுக்கான இடத்தேவையை பாதிக்கும் என்பதோடு, நகர்ப்புற வீட்டு விற்பனையையும் மந்தமாக்கும் என்ற கணிப்பே தற்போதைய சரிவுக்கு காரணமாக பா ர்க்கப்படுகிறது.
ஆகையால், முதலீட்டாளர்கள் இனி ஒட்டுமொத்த துறையையும் நம்பாமல், சிறப்பாக செயல்படும் தனிப்பட்ட நிறுவனங்களை மட்டும் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
