விருப்பமனு விபரத்தை வெளியிடாத த.வெ.க.,

சென்னை: வினியோகித்த விருப்ப மனுக்களில், எவ்வளவு பூர்த்தி செய்து திரும்பி வந்தன என்ற விபரத்தை, த.வெ.க., வெளியிடாதது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்காக, த.வெ.க., சார்பில் போட்டியிட, கடந்த 6ம் தேதி விருப்ப மனு வழங்கப்பட்டது. அவற்றை பூர்த்தி செய்து, 20ம் தேதிக்குள், கட்சி தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்ப, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும்போது, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என, பலருக்கும் தெரியவில்லை. அந்த தகவல் தெரிந்தபின், பலரும் மனுவை பூர்த்தி செய்யவே இல்லை. இதனால், ஒரு தொகுதிக்கு 20 விருப்ப மனு கூட, உருப்படியாக திரும்பி வரவில்லை.

முதல் நாளிலேயே, 10,000 விருப்ப மனு விற்று தீர்ந்ததாக அறிவித்துவிட்டு, தற்போது 4,700 விருப்ப மனு மட்டும் திரும்பி வந்திருப்பதாக அறிவித்தால், விமர்சனமாக வாய்ப்பு உள்ளது. எனவேதான், எவ்வளவு விருப்ப மனு வந்தது என்ற விபரத்தை, தலைமை இன்னும் வெளியிடாமல் வைத்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link