சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று( பிப்ரவரி 25) காலமானார். அவருக்கு வயது 101.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது 101. வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த பிப்.,1 ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில்,நேற்று முன்தினம் மாலை அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1:55 மணிக்கு அவர் காலமானதாக டாக்டர்கள் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வரலாறு
பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் 1925 டிச.,26 ல் ராமசாமி – கருப்பாயி தம்பதிக்கு 3வது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலையில் பள்ளியில் படித்த போது, பள்ளி ஆசிரியர் மூலம் பொது உடமைக் கருத்துகள் அறிமுகமானது.
25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகள் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆகவும் இருந்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தீண்டாமை, கனிம வளக்கொள்கை்கு எதிரான போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளார்.
மதுரையில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதனை எதிர்த்து, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவராக இருந்த நல்லகண்ணு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
2010ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்த ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நல்லகண்ணு நேரில் ஆஜராகி வாதாடினார்.
