புவனேஸ்வர்: ஒடிசாவில் லஞ்சம் வாங்கி கைதான சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் 4 கோடியே 27 லட்ச ரூபாயை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சுரங்கத்துறை துணை இயக்குநராக பணியாற்றுபவர் தேபப்பிரதா மொகந்தி. இவர் சுரங்கப் பணிகளை தடையின்றி செய்வதற்கு லைசென்ஸ் வாங்கிய ஒப்பந்ததாரர் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது நேற்று கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரிடம் சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். வீட்டில் பல இடங்களில் கட்டுக்கட்டாக மறைத்துவைத்திருந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
உடனடியாக பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. அதில் இதுவரை 4 கோடியே 37 லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் இருந்து 130 கிராம் தங்கம் மற்றும் அவரது பெயரில் 2,400 சதுர அடி பரப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் ஆவணங்களும் சிக்கின. அவரது அலுவலகத்தில் மேஜையில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ” மாநில வரலாற்றில் லஞ்ச வழக்கில் அதிகாரி ஒருவரிடம் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். பணம் எண்ணும் பணி தொடர்ந்துநடக்கிறது. இவர் மீது ஏற்கனவே 2009 ல் லஞ்ச வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
