கொழும்பு: ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் கேப்டன் சான்ட்னர், ரச்சின் கைகொடுக்க நியூசிலாந்து அணி 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2வது தோல்வியை பெற்ற இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இலங்கையின் கொழும்புவில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் (‘பிரிவு-2’) இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
சான்ட்னர் விளாசல்: நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பர்ட் (8) ஏமாற்றினார். ரச்சின் ரவிந்திரா (32), ஆலன் (23), பிலிப்ஸ் (18) ஓரளவு கைகொடுத்தனர். மார்க் சாப்மன் (0), டேரில் மிட்சல் (3) சோபிக்கவில்லை. நியூசிலாந்து அணி 12.1 ஓவரில், 84/6 ரன் எடுத்து திணறியது.
பின் இணைந்த கேப்டன் சான்ட்னர், மெக்கன்சி ஜோடி நம்பிக்கை தந்தது. சரித் அசலங்கா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மெக்கன்சி, துஷ்மந்தா சமீரா வீசிய 17வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாச, ஸ்கோர் 100 ரன்னை கடந்தது. மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த சான்ட்னர், மகேஷ் தீக் ஷனா வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் பறக்கவிட, 21 ரன் கிடைத்தது. சமீரா வீசிய கடைசி பந்தில் சான்ட்னர் (47 ரன், 4X6, 2X4) அவுட்டானார்.
நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது. மெக்கன்சி (31 ரன், 2X6, 3X4) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் தீக் ஷனா, சமீரா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
ரச்சின் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு மாட் ஹென்றி தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ பதும் நிசங்கா (0), சரித் அசலன்கா (5) வெளியேறினர். ரச்சின் ரவிந்திரா ‘சுழலில்’ குசால் மெண்டிஸ் (11), பவன் ரத்னாயகே (10), கேப்டன் தசுன் ஷனகா (3), துஷன் ஹேமந்தா (3) சிக்கினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கமிந்து மெண்டிஸ் (31), சான்ட்னர் ‘சுழலில்’ அவுட்டானார். துனித் வெல்லாலகே (29) ஓரளவு கைகொடுத்தார்.
இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 105 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சமீரா (6), தீக் ஷனா (1) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ரச்சின் 4, மாட் ஹென்றி 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை ரச்சின் கைப்பற்றினார்.
