சென்னை : அரசு போக்குவரத்து கழக பஸ்கள் விபத்தில் சிக்கியது 463 பேர் இறந்துள்ளனர்.நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 21,122 சாலை விபத்துகள் நடந்து உள்ளன.
இதற்கிடையே, தமிழகத்தில் செயல்படும், எட்டு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் விபத்து எண்ணிக்கை, உயிரிழப்புகள் குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ‘ஸ்டாப் கரப்ஷன்’ தொழிற்சங்கப் பேரவை தலைவர் அன்பழகன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கோரி இருந்தார்.
சென்னை உட்பட ஐந்து போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளன.அதன்படி, கடந்த ஆண்டு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 221 சாலை விபத்துகள், 48 உயிரிழப்புகள்; கோவையில், 345 விபத்துகள், 97 உயிரிழப்புகள்; விழுப்புரத்தில், 615 சாலை விபத்துகள், 221 உயிரிழப்புகள்; திருநெல்வேலியில், 129 சாலை விபத்துகள், 54 உயிரிழப்புகள்; விரைவு போக்குவரத்துக் கழகத்தில், 134 விபத்துகள், 43 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து, தொழிற்சங்க பேரவைத் தலைவர் அன்பழகன், பொதுச்செயலர் காமராஜ் ஆகியோர் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில், 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2025ல் சாலை விபத்துகள் 40 சதவீதம் குறைந்து உள்ளன. குறிப்பாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 2024ல் 1,004ஆக இருந்த விபத்துகளின் எண்ணிக்கை, 221ஆக குறைந்துள்ளது. மேலும், விபத்து இல்லாத பயணத்தை மேற்கொள்ள, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை நியமித்து, சாலை விபத்துகளை தடுக்க, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், அரசு பஸ்களில் அடிக்கடி, பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
