சென்னை: ‘காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்’ என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை எழிலகம் வளாகத்தில், நேற்று கிராம உதவியாளர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள், தங்களுக்கு, நான்காம் நிலைக்கு இணையான, காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, கடந்த 5ம் தேதி முதல், தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 11ம் தேதி முதல், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று 21ம் நாளாக, சென்னை எழிலகம் வளாகத்தில், 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும், கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில், கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழிலகம் வளாகத்தில், கிராம உதவியாளர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில், கடந்த மூன்று தினங்களாக, கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசியது.
இதை மாநகராட்சி நிர்வாகமோ, அவ்வளாகத்தில் அமைந்துள்ள அரசு அலுவலக ஊழியர்களோ கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கிராம உதவியாளர்கள், தேங்கியிருந்த கழிவுநீரை தங்கள் சொந்த செலவில் அகற்றினர்.
வருவாய் அலுவலர்கள்
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பணி காலத்தில் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கான பணி ஒதுக்கீடு, 5 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் குமரன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள், சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுரவ விரிவுரையாளர்கள்
தமிழ்நாடு அரசு கல்லுாரி, கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், யு.ஜி.சி., உத்தரவின்படி, 57,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்; 12 மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும், கடந்த 9ம் தேதி முதல், கவுரவ விரிவுரையாளர்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 23ம் தேதி முதல், பணி புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர். நேற்று, சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லுாரி, மாநில கல்லுாரி, ராணிமேரி கல்லுாரி உட்பட மாநிலம் முழுதும், பல்வேறு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களின் தொடர் போராட்டத்தால், பல்வேறு அரசு கல்லுாரிகளில், பாடங்கள் எடுக்க, போதிய பேராசிரியர்கள் இல்லாமல், கற்பித்தல் பணி முடங்கி உள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.
கட்டுமான தொழிலாளர்கள்
கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒய்வூதியத்தை, 1,200 ரூபாயிலிருந்து, 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சிவானந்தா சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தற்காலிக பேராசிரியர்கள்
அண்ணா பல்கலை மண்டல வளாகங்கள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் பணியாற்றிய, 300க்கும் அதிகமான, தற்காலிக பேராசிரியர்கள், கடந்த ஆண்டு டிச., 31ம் தேதி முதல், பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்காலிக பேராசிரியர்கள், தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக, மாணவர் நலன், ஆய்வக வகுப்புகள், கல்வி தரத்தை உயர்த்துவதில், அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த, தற்காலிக பேராசிரியர்களை, திடீரென பணி நீக்கம் செய்தது ஏற்கத்தக்கதல்ல.
எங்களை பணி நீக்கம் செய்துவிட்டு, மீண்டும் புதிய தற்காலிக பேராசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கியது, பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின்வாரிய ஊழியர்கள் தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள், அதிகாரிகள் என, அனைவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதியஉயர்வு வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, வேலைப்பளுவும் மாற்றப்படுகிறது.
கடந்த, 2023 டிச., முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இதை விரைவாக வழங்குமாறு, தமிழக அரசுக்கும், மின்வாரியத்திற்கும், தொழிற்சங்கங்களின் சார்பில், தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஊதிய நிர்ணயம் தொடர்பாக, அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், அதிகாரிகள் கடந்த வாரம் பேச்சு நடத்தினர்.
அதன் அடிப்படையில், ‘முதல்நிலை, இரண்டாம் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு, இனி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு வழங்கப்படாது’ என, தொழிற்சங்கங்களுக்கு, மின் வாரியம் வரைவு கருத்துருவை வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்களும், அதிகாரிகளும், சென்னை, மின்வாரிய அலுவலக வளாகத்தில், நேற்று மாலை கவன ஈர்ப்பு வாயிற்கூட்ட போராட்டம் நடத்தினர்.
