வெய்ல்: இத்தாலியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஆல்பைன் பனிச்சறுக்கு ‘டவுன்ஹில்’ பிரிவில் அமெரிக்காவின் லிண்ட்சே வோன் 41, பங்கேற்றார். போட்டி துவங்கிய 13வது வினாடியில், நிலை தடுமாறி கீழே விழுந்த இவரது, இடது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இவர் கூறுகையில், ”எனது வாழ்க்கையில் சந்தித்த மோசமான விபத்து இது. எனது காலை இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டது. இத்தாலி மருத்துவர்கள் என்னை காப்பாற்றினர். இதில் இருந்து மீண்டு வர ஒரு ஆண்டு தேவைப்படும்,” என்றார்.
அர்ஜென்டினா கால்பந்தில் ‘ஸ்டிரைக்’
பியுனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து சிங்க தலைவர் கிளாடியோ தபியா 58. இவர், ‘சமூக பாதுகாப்பு நிதிகளை தவறாக பயன்படுத்தியதாக,’ அர்ஜென்டினா அரசின் சுங்க வருவாய் கட்டுப்பாட்டு அமைப்பு புகார் கொடுத்தது. இதுகுறித்து விசாரணைக்கு மார்ச் 5ல் வருமாறு நீதிமன்றம் தெரிவித்தது. இவ்விஷயத்தில் கிளாடியோவுக்கு ஆதரவாக, மார்ச் 5 முதல் 8 வரையிலான அனைத்து போட்டிகளையும் நிறுத்தி, ‘ஸ்டிரைக்கில்’ ஈடுபட, அர்ஜென்டினா கிளப் அணிகள் முடிவு செய்துள்ளன.
எக்ஸ்டிராஸ்
* சிங்கப்பூரில் ‘ஸ்மாஷ்’ டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் தியா, மனுஷ் ஷா ஜோடி, இன்று பிரேசிலின் ஹியுகோ, புருனா ஜோடியை சந்திக்க உள்ளது.
* ஜெர்மனி ஓபன் பாட்மின்டன் தொடர் நேற்று முல்ஹெய்ம் நகரில் துவங்கியது. பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி, 21-10, 21-15 என்ற நேர் செட்டில் தென் கொரியாவின் ஹிசுவானை வீழ்த்தினார்.
* செக் குடியரசில் ‘பிராகு’ சர்வதேச செஸ் இன்று துவங்குகிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியா சார்பில், உலக சாம்பியன் குகேஷ், அரவிந்த் சிதம்பரம் பங்கேற்கின்றனர்.
* ஜம்மு அண்டு காஷ்மீரின் குல்மார்க்கில், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு நடக்கிறது. இரண்டாவது நாளான நேற்று, சி.ஆர்.பி.எப்.,ன் காஜல் குமாரி ராய், பனிச்சறுக்கு பிரிவில் தங்கம் கைப்பற்றினார். இங்கு, இவர் வென்ற இரண்டாவது தங்கம் ஆனது.
* இந்திய தடகள வீராங்கனை பூஜா ஆத்மராம் 30 (5000, 10000 மீ., ஓட்டம்). ராஜஸ்தானை சேர்ந்த இவர், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. தனது தவறை ஒப்புக் கொண்டதால், ஒரு ஆண்டு குறைத்து, 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
