'நமக்கான வாகனம் அருகே வந்து விட்டது' பா.ம.க., தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: கூட்டணியை இன்று அறிவிக்கவுள்ள நிலையில், தொண்டர்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘நமக்கான வாகனம் அருகே வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டு உற்சாகப்படுத்தியுள்ளார்.

தொண்டர்களுக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்:

என் உயிரை விட மேலான பா.ம.க., தொண்டர்கள் அனைவரும் என்னோடு தான் அணிவகுத்து நிற்கின்றனர்.

சமூகநீதி வரலாற்றில் தமிழகத்தில் நான்கு இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் இரண்டு இட ஒதுக்கீடுகள் என, மொத்தம் ஆறு இட ஒதுக்கீடுகளை பா.ம.க., தான் போராடி வென்றெடுத்தது.

பா.ம .க.,வின் பலம் அப்படியே தான் உள்ளது. ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்ற கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி, நமக்கான இலக்கை அடைவோம்; சோர்வு என்பது நம் அகராதியிலேயே இல்லை.

பா.ம.க., தொண்டர்களின் மனதில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை அறிவேன்.

நாம் பயணிக்க வேண்டிய துாரம் நீண்டது. எனவே, கிடைக்கும் வாகனங்களில் ஏறி பயணித்தால், இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம், இதோ நம் அருகே வந்து விட்டது. அதில் தான் பயணிக்கப் போகிறோம்.

நாம், நம் இலக்கை அடைந்து, லட்சியத்தை வெல்வோம்; எப்போதும் இணைந்தே இருப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டணி முடிவு இன்று அறிவிப்பு பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம், திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடக்கிறது. சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, இக்கூட்டத்தில் ராமதாஸ் அறிவிக்க இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்து உள்ளனர். அதை சுட்டிக்காட்டும் விதமாகவே, ‘நமக்கான வாகனம் அருகே வந்துவிட்டது’ என, தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. ***

Source link