'நீதித்துறை ஊழல்' என பள்ளி பாடம்: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியலின் புதிய பாடப் புத்தகத்தில், ‘நீதித்துறை ஊழல்கள்’ என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்ற விவகாரத்தை, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

இதையடுத்து, புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், நவோதயா, பி.எம்., ஸ்ரீ உள்ளிட்ட மத்திய அரசின் பாடத்திட்டங்கள் உள்ள பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலின் புத்தகங்களை பயன்படுத்துகின்றன.

இந்நிலையில், எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில், புதிய பாடப்புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி., சமீபத்தில் வெளியிட்டது. அதில், ‘நீதித்துறைஊழல்கள்’ என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது.

இதில் வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற சவால்களுடன், நீதித்துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள ஊழலும் ஒரு ச வாலாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தார். முன்னதாக இது குறித்து தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறியதாவது:

இந்த விவகாரம் குறித்து எனக்கு தெரியும்; தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நீதித்துறை மீது தாக்குதல் நடத்த எவரையும் அனுமதிக்க மாட்டோம்.

இந்த விவகாரத்தால் வழக்கறிஞர் தரப்பும், நீதிபதிகள் தரப்பும் கவலை அடைந்துள்ளனர். பல உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக என்னை தொடர்பு கொண்டனர். யார் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் கவலையில்லை; சட்டம் தன் கடமையை செய்யும். இதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

பள்ளி மாணவர்களிடம் நீதித்துறை ஊழல்கள் குறித்து கற்பிப்பது, ஆழமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை போல தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link