உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்; இந்திரா ஆட்சியில் நடந்தது அநியாயம்!

சில சமயம் பத்திரிகை மற்றும் டிவி அலுவலகங்களில் ஒரு விஐபி பெயரைச் சொல்லி, ‘அவருடைய பேட்டி வந்தே ஆக வேண்டும்’ என சொல்லிவிடுவார்கள். ஆனால் அந்த விஐபியோ பேட்டி என்றால், அதுவும் டிவி பேட்டி என்றால், ஓடியேவிடுவார்.

இதை அலுவலகத்தில் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ‘நீ முயற்சி செய்யவில்லை… சரியாக அவரை அப்ரோச் செய்திருக்க மாட்டாய்’ என நம் மீதே பாய்வார்கள். ஆனாலும் சில சமயம் அந்த விஐபியை தொடர்ந்து போன் செய்து அன்புத் தொல்லை கொடுத்து வந்தால் அது க்ளிக் ஆவதும் உண்டு. இப்படிப்பட்ட விஷயங்களுக்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை.

‘எப்படியும் அந்த ஆள் பேட்டி கொடுக்கப் போவதில்லை. எதற்கு அவருக்கு போன் செய்ய வேண்டும்’ என இருந்துவிட்டால் வேறொரு சேனலில் அவர் பேட்டி வரும். அப்போது நமக்கு ஆபீஸில் டின் கட்டிவிடுவார்கள். இப்படி எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம்தான் இது.அதற்கு முன் தலைமை நீதிபதிகள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள், அதற்கு என்ன அடிப்படை என்பதைப் பார்க்கலாம்.

Image 1541394

தலைமை நீதிபதி நியமனமும் பிரச்னைகளும்!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம் என்பது சீனியாரிட்டி பொறுத்துத்தான் அமையும். இதுதான் நடைமுறை. ஆனால் இரண்டு முறை இந்த சீனியாரிட்டியை மீறி தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.என்.ரே நியமிக்கப்பட்டார். சீனியாரிட்டி லிஸ்டில் 4வது இடத்தில் இருந்த இவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு சொல்லப்பட்ட காரணம், 1973ம் ஆண்டு வழங்கப்பட்ட சரித்திரப் புகழ் பெற்ற கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு. பார்லிமென்டிற்கு அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் உண்டு; ஆனால் அதன் அடிப்படை அமைப்பை (basic structure) பார்லிமென்டால் மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் 7 நீதிபதிகள் அரசுக்கு எதிராக மெஜாரிட்டி தீர்ப்பு வழங்கினர். 6 நீதிபதிகள் அடிப்படை சட்டத்தை பார்லிமென்ட் மாற்றலாம் என மைனாரிட்டி தீர்ப்பை அளித்தனர்.

அந்த மைனாரிட்டி தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர்தான் இந்த ஏ.என்.ரே. இதனால் அப்போதைய பிரதமர் இந்திரா, நீதிபதி ஏ.என்.ரேவை தலைமை நீதிபதியாக நியமித்தார். இதனால் இவருக்கு சீனியரான மூன்று நீதிபதிகளும் ராஜினாமா செய்தனர்.அடுத்தது நடந்தது எமர்ஜென்சி காலத்தில். 1977 ஜூன் மாதம் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவிக்கு வர வேண்டியவர் நீதிபதி எச்.ஆர்.கன்னா. ஆனால் இவருக்கு பதில் ஹமீதுல்லா பெக் தலைமை நீதிபதியாக இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்டார். இதற்கும் காரணம் உண்டு.

எமர்ஜென்சியின்போது அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது இந்திரா அரசுக்கு சாதகமான தீர்ப்பாக கருதப்பட்டது. 4 நீதிபதிகள் அரசுக்கு சாதகமாவும் நீதிபதி கன்னா அரசுக்கு எதிராகவும் தீர்ப்பளித்தார். இதனால் நீதிபதி கன்னாவிற்கு வர வேண்டிய தலைமை நீதிபதி சான்ஸ், வராமல் போய்விட்டது. உடனே அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

நேரு காலத்திலும்…

1964ல் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போதும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்போது தலைமை நீதிபதியாக வர வேண்டியவர் நீதிபதி எஸ். ஜாபர் இமாம். ஆனால் நீதிபதி கஜேந்திர கட்கர் அந்த பதவிக்கு வந்தார். நீதிபதி இமாமுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாம். இதனால் மனநிலையும் சரியில்லை என்பதால் இப்படி நேரு முடிவெடுத்தார். எனவே இதை இந்திரா லிஸ்டில் சேர்க்க முடியாது.

ஒரு மாதத்திற்கு முன்…

பதவி முடியும் தருவாயில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடுத்து யார் இந்த பதவிக்கு வருவார் என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரு மாதம் முன்பு கடிதம் மூலமாக மத்திய சட்ட அமைச்சருக்கு இன்னார்தான் அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு வர வேண்டும் என சிபாரிசு செய்கிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.

ஒருவேளை இதை தலைமை நீதிபதி மறந்துவிட்டாலோ அல்லது கால தாமதம் செய்தாலோ சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பும். தனக்கு அடுத்த சீனியாரிட்டி லிஸ்டில் இருப்பவரைத்தான் சிபாரிசு செய்வார் தலைமை நீதிபதி.

ஒரு தலைமை நீதிபதி தனக்கு அடுத்தது யார் என்பதை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினார். நினைவூட்டல் கடிதம் வந்த பிறகும் சிபாரிசு கடிதம் அனுப்பவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு நீதிபதி தலைமை நீதிபதி வீட்டிற்கே சென்று அவர் காலில் விழாக் குறையாக கேட்டுக் கொண்டதனால் அவர் பெயரை சிபாரிசு செய்து கடிதம் எழுதினார். இதற்கு காரணம் ஈகோதான்.

நம் விஷயத்திற்கு வருவோம். தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தனக்கு அடுத்ததாக ஷரத் அர்விந்த் போப்டே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என ஒரு மாதத்திற்கு முன்பே கடிதம் எழுதிவிட்டார்.

போன் மேல் போன்

இவர்தான் தலைமை நீதிபதியாக வரப் போகிறார் என்பது ஏற்கெனவே தெரியும் என்பதால் அவருடைய வீட்டிற்கு போன் செய்து அவரை சந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

“உங்களுடைய வேண்டுகோளை அவரிடம் அனுப்பிவிடுவோம். அவர் சொன்னால் உங்களை அழைப்போம்” என பதில் சொன்னார் செயலர். என் செல்போன், நான் பணியாற்றும் டிவி என விவரங்களை அந்த செயலரிடம் சொன்னேன்.

மாலை மறுபடியும் நீதிபதி போப்டே வீட்டிற்கு போன் செய்தேன். “இதுவரை லார்ட்ஷிப்பிடமிருந்து (இப்படித்தான் மரியாதையாக நீதிபதியின் செயலர்கள் அவர்களை அழைக்கின்றனர்) எந்த பதிலும் இல்லை.

நான் விடவில்லை. மறுபடியும் காலை போன். அதே பதில். மீண்டும் மாலை போன். என் பெயரைச் சொன்னதுமே, ‘சாரி சார் இதுவரை லார்ட்ஷிப் எந்த பதிலும் தரவில்லை’ என பதில் வரும். நீதிபதி போப்டேயின் அலுவலகத்திற்கு நான் மிகவும் தெரிந்தவனாகிவிட்டேன்.

இப்படி ஒரு வாரம் போனது. ஒரு நாள் செல்போன் சிணுங்கியது. ஏதோ ஒரு நம்பர். “லார்ட்ஷிப் உங்களிடம் பேசுவார்” என அடுத்த முனையில் சொல்ல, ‘நிச்சயம் இது நீதிபதி போப்டேவாகத்தன் இருக்கும்’ என நினைத்துக் கொண்டேன்.

“மிஸ்டர் வைத்தியநாதன்..” நீதிபதியின் குரல் சற்று கரகரப்பாக ஒலித்தது.

“யெஸ் சார்”

“நீங்கள் பேட்டி எடுக்க நினைக்கிறீர்கள்…என் அப்பாயின்மெண்ட் கடிதம் வந்த பிறகு பார்துக்கொள்ளலாமே” என்றார் நீதிபதி.

“நிச்சயமாக சார். ஆனால் தயவு செய்து மறந்துவிடாதீர்கள்” என அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

வந்தது அப்பாயின்மெண்ட்

அக்டோபர் 28, 2019. அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஷரத் அர்விந்த் போப்டேவை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். செய்தி என் சேனல் உட்பட அனைத்து சேனல்களிலும் Flash ஆயிற்று.

செய்தி வந்த அன்று மாலையே அவருடைய வீட்டிற்கு போன் செய்தேன். வழக்கம் போல அதே பதில், – ‘உங்களுடைய வேண்டுகோளை அவரிடம் வைக்கிறோம்’ என்று.’இந்த முறை அவருடைய பேட்டி வேண்டும்’ என கேட்டேன்.

முன்பு போலவே தினமும் காலை மாலை காபி குடிப்பதைப் போல அவருடைய வீட்டிற்கு போன் செய்து வந்தேன்.இப்படியே நான்கு நாட்கள் போனது. அவ்வளவுதான் போலிருக்கிறது, பேட்டி கிடைக்காது என நினைத்துக் கொண்டேன்.

வந்தது அழைப்பு

திடீரென ஒரு நாள் மாலை அவர் அலுவலகத்திலிருந்து போன். “நாளை மாலை 5 மணிக்கு பேட்டி எடுக்க வீட்டிற்கு வந்துவிடுங்கள்” என்றனர்.உடல் முழுக்க புது ரத்தம் பரவி உடம்பு ஜிவ்வென்று ஆயிற்று. அப்பாடா ஒரு வழியாக நேரம் வந்துவிட்டது.

என்னுடன் ஹிந்தி சேனலுக்காக பணியாற்றும் ஆஷிஷ் பார்கவாவிற்கு விஷயத்தை சொன்னேன். அவருக்கு குஷி தாங்க முடியவில்லை. “சார்…நமக்கு மட்டும்தான் பேட்டியா? அல்லது மற்ற சேனல்களுக்கும் அழைப்பு உண்டா” என ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.

அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்…நம் வேலையை செய்வோம் என அவருக்கு பதில் சொன்னாலும் உள்ளுக்குள் லேசான ஒரு உதறல். காரணம் நமக்கு மட்டுமே பேட்டி கிடைக்க வேண்டும் என்கிற சுயநலம்.

உடனே நீதிபதியின் வீட்டிற்கு போன் செய்து நேரடியாக கேட்காமல் என் பாணியில் விசாரித்தேன். எங்களுக்கு முன் 2 பேரும், எங்கள் பேட்டிக்கு பிறகு ஒருவருக்கும் நேரம் ஒதுக்கியிருப்பதாக தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் அனைவருமே பிரிண்ட் மீடியாவிலிருந்துதான். எங்களைத் தவிர வேறெந்த சேனலுக்கும் அவர் நேரம் ஒதுக்கவில்லை.

ஆபீஸுக்கு போன் செய்து, ‘நாளை மாலை ஒரு முக்கிய பேட்டி எடுக்க வேண்டும், கேமராவும் எங்கள் பேட்டியை உடனடியாக அலுவலகத்திற்கு சேட்டிலைட் மூலமாக அனுப்ப தேவையான உபகரணமும் நாளைக்கு வேண்டும்’ என சொன்னேன்.

எங்கள் டிவியைப் பொறுத்தவரை விஐபியின் பேட்டி என்றால் மூன்று கேமராக்கள், இரண்டு கேமராமேன்கள், லைட் என ஏகப்பட்டது தேவைப்படும். ஆனால் நீதிபதி போப்டே எவ்வளவு நேரம் எங்களுக்கு ஒதுக்கியுள்ளார் என தெரியாத நிலையில் ஒரே ஒரு கேமரா போதும் என சொல்லிவிட்டேன்.

அதிர்ச்சி

நானும் ஆஷிஷும் 4 மணிக்கே நீதிபதி போப்டேவின் வீட்டில் ஆஜராகிவிட்டோம். எங்களுடன் கேமராவுமன். என்.டி.டி.வியில் நிறைய பெண்கள் கேமராவைக் கையாண்டார்கள். செயலர் எங்களை விருந்தினர் அறையில் அமர வைத்தார்.

எங்களுக்கு முன் சென்றவர்கள் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என அறிந்தோம். ஒன்றுக்கு 3 பேர் அந்த செய்தி நிறுவனத்திற்காக பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வெளியே வந்ததும் எங்களை உள்ளே அனுப்பினார் செயலர். முதலில் நாங்கள் உள்ளே சென்று 5 நிமிடங்கள் பேசிய பிறகு கேமரா உள்ளே வருவதாக ஏற்பாடு.

எங்களைப் பார்த்ததும்…”ஹலோ வைத்தியநாதன்…கம் இன்” என்றார் நீதிபதி. இரண்டு நிமிடங்கள் எங்கள் அறிமுகம் முடிந்ததும், ”சார் கேமராவை உள்ளே கொண்டு வரலாமா,” என்றேன்.

“எதற்கு கேமரா” என்றார், அவர்.

“பேட்டி எடுக்கத்தான்” என்றேன், நான்.

“நோ நோ… கேமரா முன்பாக நான் பேட்டி அளிக்க விரும்பவில்லை” என்றார், அவர். அதிர்ச்சியில் உறைந்தோம்.

புரியவைத்தோம்

டிவியில் பேட்டி என்றால் கேமரா முன்பாகத்தானே இருக்கும் என அவரிடம் சொன்னேன். “நோ நோ…,” என்றார் மறுபடியும். “சற்று முன் யாருக்கு பேட்டி அளித்தீர்கள்,” என்று கேட்டேன். “பிடிஐ ஏஜென்சிக்கு,” என்றார் நீதிபதி.

“நீங்கள் கொடுத்த பேட்டி நாளை பிடிஐ மூலமாக அனைத்து பேப்பர்களிலும் நாளை வெளியாகும். அதையே நீங்கள் ஏன் டிவியில் சொல்லக் கூடாது…,” என்று கேட்டு வைத்தேன்.

சற்று யோசித்தார்.

கூடவே, “நீங்கள் நேரடியாக பேசுவதை மக்கள் பார்த்தால் உங்களின் இமேஜ் உயரும்,” என்றும் சொன்னேன். “ஓகே” என யோசித்தவாறே சொன்னார்.உடனே கேமரா பெண்மணியை உள்ளே அழைத்தோம். நான் ரெடி என நாற்காலியில் உட்காரப் போனவரைத் தடுத்து, “சார், டிவியில் உங்களைப் பார்க்கும் போது இப்படி டல் ஆன ஷர்ட் கூடாது… வேறு ஷர்ட் அணிந்து கொள்ளுங்கள்” என அவரிடம் சொன்னேன்.

உடனே அதை ஏற்றுக் கொண்டு உள்ளே சென்றவர், அடுத்த நான்காவது நிமிடத்தில் எங்கள் முன் நின்றார்.“இந்த ஷர்ட் ஓகேவா” என கேட்டார்.“பர்பெக்ட் சார்” என்றேன். எனக்கும் மகிழ்ச்சி.

உலகத்திலேயே முக்கியமான வழக்கு அயோத்தி வழக்குதான்

12 நிமிடங்கள் பேட்டி சுமுகமாக முடிந்தது. பிறகு ஹிந்தியில் பேட்டி எடுக்க ஆஷிஷ் தயாரான போது மறுத்துவிட்டார். ‘ஆங்கிலத்தை விட ஹிந்தியில்தான் உங்கள் பேட்டியை அதிகம் பேர் காண்பார்கள்’ என சொல்லி அவரை உட்கார வைத்து ஹிந்தியிலும் எடுத்து முடித்தோம். இதனால் அடுத்து பேட்டி எடுக்க வந்தவர் காத்திருக்க வேண்டியிருந்தது.

நாங்கள் வெளியே வர 6.45 ஆயிற்று. அலுவலகத்திற்கு பேட்டி விவரங்களைச் சொன்னோம். அவர்களுக்கு ஏக குஷி. உடனே அப்லிங்கிங் உபகரணம் மூலமாக அலுவலகத்திற்கு பேட்டியை அனுப்பினார் கேமரா பெண்மணி.7 மணி செய்தியில் எக்ஸ்குளூசிவ் என இந்த பேட்டி ஒளிபரப்பானது. இதனால் மற்ற சேனல் உச்ச நீதிமன்ற நிருபர்கள் எங்களுக்கு போன் செய்ய ஆரம்பித்தனர். காரணம் அவர்கள் அலுவலகத்தில் ஏன் அவர்களுக்கு பேட்டி கிடைக்கவில்லை என கேட்டிருப்பார்கள்.

அயோத்தி வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் போப்டேவும் ஒருவர். என் கேள்விக்கு பதில் சொன்ன போது, “ உலகில் உள்ள முக்கியமான வழக்குகளில் அயோத்தி வழக்கும் ஒன்று” என்றார். இது மிகவும் பெரிய செய்தியானது.

உன்னால் மாட்டிக் கொண்டேன்

இந்த பேட்டியை டிவிடியில் பதிவேற்றி மறுநாள் நீதிபதியிடம் கொடுக்க அவருடைய வீட்டிற்கு சென்றேன்.உள்ளே ஏகப்பட்ட கூட்டம். எல்லாம் டிவி சேனல் நிருபர்கள், கேமராக்களுடன் நின்றிருந்தனர். பிரபல டிவி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாயும் அந்த கூட்டத்தில் இருந்தார்.

நீதிபதியின் அறைக்கு சென்று டிவிடிஐக் கொடுத்தேன். “தெரியாத்தனமாக உங்கள் டிவிக்கு பேட்டி கொடுத்துவிட்டேன். இப்போது அனைத்து சேனல்களும் இங்கே வந்துவிட்டனர். ஒவ்வொருவருக்கும் 5 நிமிடங்கள் ஒதுக்க வேண்டிதாகிவிட்டது… இதற்கெல்லாம் காரணம் நீயும் உங்கள் டிவியும்தான்,” என புன்னகைத்தவாறே சொன்னார் நீதிபதி ஷரத் அர்விந்த் போப்டே.

எது எப்படியோ இவருடைய பேட்டியை முதலில் ஒளிபரப்பியது நாங்கள்தான்.

– அ.வைத்தியநாதன்Image 1541392அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

இந்த தொடரின் அடுத்த கட்டுரை, மார்ச் 2ம் தேதி காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) தினமலர் இணையதளத்தில் வெளியாகும்.

Source link