8 மாதமாக ஊதியம் தரவில்லை: ஊர்க்காவல் படையினர் குமுறல்

குடியாத்தம்: வேலுார் மாவட்டத்தில், கூடுதல் நாட்கள் பணி செய்தும், ஊர் காவல் படை வீரர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என ஊர் காவல் படை வீரர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுதும், போலீசாருக்கு உதவும் வகையில், ஊர் காவல் படையினர் செயல்படு கின்றனர். வேலுாரில், 200 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், வேலுார் எஸ்.பி.,யாக மயில்வாகனன் இருந்தபோது, ஊர் காவல் படையினர், 30 நாட்களும் பணியாற்றுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த வீரர்கள், கடந்த ஆண்டு ஜூலை முதல், எட்டு மாதங்களாக பணியாற்றினர். எனினும், கூடுதல் பணி பார்த்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.


ஊர் காவல் படை வீரர்கள் கூறியதாவது: முன்னாள் எஸ்.பி., மயில்வாகனன் உத்தரவு படி, மாதத்தில், 5 நாட்கள் வழக்கமான வேலையுடன், கூடுதலாக, 20 நாட்கள் வரை வேலை பார்த்தோம். ஆனால், அதற்கான சம்பளம் எங்களுக்கு வரவில்லை.

அதிகாரிகளிடம் கேட்டால், நிதி பற்றாக்குறை யால் முழு ஊதியம் தர முடியவில்லை என்கின்றனர். ’10 ஆண்டுகள் ஊர் காவல் படையில் பணியாற்றியவர்கள் இரண்டாம் நிலை காவலர்களாக தரம் உயர்த்தப்படுவர்’ என முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, ஊர் காவல் படை ஏரியா கமாண்டர் குமரனிடம் கேட்ட போது, ”சிறப்பு பணிக்கான நிலுவை ஊதியம் விரைவில் வழங்கப்படும்,” என்றார்.

Source link