பதான்கோட்: இந்திய ராணுவம், தீர்க்கமான தரைவழி நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்கிறது, அணு ஆயுத மிரட்டல்களுக்கு அஞ்சாது என்று பாகிஸ்தானுக்கு மேற்கு பிராந்திய தளபதி லெட்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கடியார் எச்சரித்துள்ளார்.
மேற்குப் பகுதியில் வெற்றிகரமாக முடிவடைந்த கர்கா சக்தி 2026 பயிற்சியைத் தொடர்ந்து, பாகிஸ்தானை மேற்கு பிராந்திய தளபதி லெட்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கடியார் எச்சரித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று(பிப்ரவரி 26) நடைபெற்றது.
இந்த விழாவில் மனோஜ் குமார் கடியார் பேசியதாவது:
எதிர்காலப் போர்களில் தரைவழித் தாக்குதல்களே வெற்றியைத் தீர்மானிக்கும். பாகிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றும் வரை அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை என்பதால், தரைப்படை வலுவாகச் செயல்படும்.ஆபரேஷன் சிந்து நிகழ்வின் போது, பாகிஸ்தான் ஒருபுறம் போர்நிறுத்தத்திற்காகக் கெஞ்சியபடியே, மறுபுறம் அணு ஆயுத மிரட்டல்களை விடுத்தது.
இந்தியா, தற்போது கடந்த காலத்தை விட சிறந்த முறையில் தயாராக உள்ளது. சமீபத்திய ராணுவப் பயிற்சிகள் வெறும் சடங்காக இல்லாமல், நவீன உபகரணங்களைக் கொண்டு உண்மையான களச் சூழலைச் சோதிப்பதாக அமைந்தன.பாகிஸ்தான் ராணுவத் தலைமை தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே போர் போன்ற சூழலைத் தொடர்ந்து உருவாக்குகிறது. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு மனோஜ் குமார் கடியார் பேசினார்.
