எளியவர் இதயங்களை இன்னும் ஆள்கிறார் எம்ஜிஆர்: திமுகவினர் 'ஷாக்' ஆகும் வீடியோ வைரல்!

-நமது நிருபர் –


‘இந்த வண்டியை யார் கொடுத்தாங்க” என்று ஆவலோடு கேட்ட திமுக நிர்வாகிக்கு அப்பாவியாக பதில் சொன்னார் அந்த மாற்றுத்திறனாளி, ‘எம்ஜிஆர்’ என்று. சுற்றி நின்ற திமுகவினருக்கு அதிர்ச்சி; அதைக்கேட்டு அமைச்சர் தியாகராஜன் சிரிக்கிறார். ஏழை எளிய மக்களின் உள்ளங்களை இன்னும் எம்ஜிஆர் தான் ஆள்கிறார் என்பதற்கு, இணையத்தில் வைரல் ஆகும் இந்த வீடியோவே சாட்சி.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் ஒருவருக்கு மூன்று சக்கர வண்டியை அமைச்சர் தியாகராஜன் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட முதியவரிடம் அங்கிருந்த நகர செயலாளர் ராஜேந்திரன், நீங்கள் வந்து கேட்டது ஊன்றுகோல் கேட்டீர்கள் ஆனால், ஒரு மணி நேரத்தில் இந்த வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது. வாகனத்தை கொடுத்தது யார் என கேட்டார். முதல்வர் ஸ்டாலின் அல்லது அமைச்சர் பெயரை கூறுவார் என அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பதிலை எதிர்பார்த்தனர்.

ஆனால், அந்த முதியவரோ எதுவும் யோசிக்காமல் உடனடியாக எம்ஜிஆர் என பதில் கூறினார். இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர் தியாகராஜன் சிரித்தபடி நிலைமையை சமாளித்தார். மேலும், ஏன் அந்த கேள்வியை கேட்டோம் என்ற நிலை ராஜேந்திரனுக்கு ஏற்படுத்தியது. பிறகு அதனை சமாளித்து முதியவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு முதியவரை அனுப்பி வைத்தனர்.

இதனை பார்த்த அங்கிருந்த பலர், எம்ஜிஆர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவரது பெயர் மற்றும் பெருமை இன்னும் பலரின் மனங்களில் நிறைந்து இருக்கிறது எனக்கூறி சென்றனர்.

Source link