தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் கேப்டன் மார்க்ரம் 82 ரன் விளாச, தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் (பிரிவு-1) தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

விக்கெட் சரிவு: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் (16), பிரண்டன் கிங் (21) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ரபாடா பந்தில் ஷிம்ரன் ஹெட்மயர் (2) அவுட்டானார். நிகிடி ‘வேகத்தில்’ ராவ்மன் பாவெல் (9), ராஸ்டன் சேஸ் (2) வெளியேறினர். கார்பின் பாஷ் பந்தில் ஷெர்பேன் ரூதர்போர்டு (12), மாத்யூ போர்டு (11) ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 10.2 ஓவரில் 83/7 ரன் எடுத்து திணறியது.

சூப்பர் ஜோடி: பின் இணைந்த ஜேசன் ஹோல்டர், ஷெப்பர்டு ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. நிகிடி, கேஷவ் மகாராஜ், பாஷ், ரபாடா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார் ஷெப்பர்டு. மார்கோ யான்சென் வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 23 ரன் விளாசினார் ஹோல்டர். எட்டாவது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த போது ஹோல்டர் (49 ரன், 3X6, 4X4) ‘ரன்-அவுட்’ ஆனார். பாஷ் வீசிய கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஷெப்பர்டு அரைசதம் கடந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்தது. ஷெப்பர்டு (52 ரன், 4X6, 3X4) அவுட்டாகாமல் இருந்தார். த

மார்க்ரம் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாச, ‘பவர்-பிளே’ ஓவரின் (1-6) முடிவில் 69/0 ரன் எடுத்திருந்தது. முதல் விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது ராஸ்டன் சேஸ் பந்தில் குயின்டன் (47 ரன், 4X6, 4X4) அவுட்டானார். மார்க்ரம், 27 பந்தில் அரைசதம் எட்டினார். ராஸ்டன் சேஸ் வீசிய 14வது ஓவரில் மார்க்ரம் 2, ரிக்கிள்டன் ஒரு சிக்சர் பறக்கவிட, 19 ரன் கிடைத்தது.

ஹோல்டர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்க்ரம் வெற்றியை உறுதி செய்தார். தென் ஆப்ரிக்க அணி 16.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மார்க்ரம் (82 ரன், 4X6, 7X4), ரிக்கிள்டன் (45 ரன், 2X6, 4X4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மார்க்ரம் வென்றார். ‘சூப்பர்-8’ல் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த தென் ஆப்ரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமடைந்தது.

ராசியான ஆமதாபாத்

இத்தொடரில் விளையாடிய 6 போட்டியிலும் (4 லீக், 2 ‘சூப்பர்-8’) தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. இதில் 5ல் ஆமதாபாத்தில் வென்றது.

Source link