விமான டிக்கெட் ரத்துக்கு இனி கட்டணம் இல்லை; விதிகளில் வந்தது மாற்றம்

புதுடில்லி: சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய விதிமுறையில், ‘விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது’ என கூறப்பட்டு உள்ளது.

டி.ஜி.சி.ஏ., எனப்படும் மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சி.ஏ.ஆர்., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து விதிகளில் கடந்த 24ம் தேதி திருத்தம் கொண்டு வந்தது. இது உடனடியாக அமலுக்கு வந்தது.

அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள், கூடுதல் கட்டணமின்றி ரத்து செய்யவோ, மாற்றம் செய்யவோ முடியும். மாற்றம் செய்யும் போது, புதிய விமான கட்டணத்தில் உள்ள வித்தியாச தொகை மட்டும் வசூலிக்கப்படும்.

ஆனால் ஏழு நாட்களுக்குள் புறப்படும் உள்நாட்டு விமானங்கள் மற்றும் 15 நாட்களுக்குள் புறப்படும் வெளிநாட்டு விமானங்களுக்கான டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தாது.

விமான நிறுவனத்தின் இணையதளம் மூலம் நேரடியாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில், 24 மணி நேரத்திற்குள் பெயர் திருத்தம் கோரப்பட்டால் அதற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது.

பயணச்சீட்டு முகவர் அல்லது மூன்றாம் தரப்பு இணையதளம் மூலம் டிக்கெட் பெற்றிருந்தாலும், பணத்தை திரும்ப வழங்கும் பொறுப்பு விமான நிறுவனத்துக்கே உண்டு. 14 வேலை நாட்களுக்குள் பணம் திருப்பி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link