மதுரை: தமிழகத்தில் தனியார் தொழிற்பேட்டை கட்டமைப்பிற்கு 50 சதவீத நிதி ஒதுக்குவதால் தொழில்களை விரிவுபடுத்த

மதுரை: தமிழகத்தில் தனியார் தொழிற்பேட்டை கட்டமைப்பிற்கு 50 சதவீத நிதி ஒதுக்குவதால் தொழில்களை விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது என தொழிற்துறையினர் தெரிவித்தனர்.

தொழிற்துறையினர் கூறியதாவது: குறுந்தொழில், சிறுதொழில் அதிபர்கள் எடுத்தவுடனே ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி தொழில் செய்வதில்லை. முதலீட்டுச்செலவை குறைக்கும் வகையில் வாடகைக் கட்டடத்தில் தான் செயல்படுவர். கொஞ்சம் வளர்ந்த பிறகே கால் ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வாங்கி கட்டுமானத்தைத் துவங்குவர். நிலம் வாங்கும் போது வீடுகள் இல்லாத புறநகர்ப்பகுதியில் இடம் வாங்கி தொழிலுக்கான கட்டடம் கட்டினாலும் அடுத்த பத்தாண்டுகளில் குடியிருப்புகள் பெருகி பிரச்னை ஆரம்பிக்கிறது.

குடியிருப்புகள் வந்தபின் தொழிற்சாலைகளால் சத்தம் வருகிறது என நீதிமன்றத்திலோ மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலோ புகார் செய்யும் போது அந்த தொழில்கள் நிரந்தரமாக முடங்கி விடுகின்றன.

ஏற்கனவே சிறப்பாக செயல்படும் தொழில் நிறுவனங்கள் இப்பிரச்னையால் தொழிலை விரிவுபடுத்த இடம் கிடைக்காமல் திணறுகின்றன. சிறு, குறு நிறுவன உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து 50 முதல் 100 ஏக்கரில் இடம் வாங்க திட்டமிடுகிறோம். அதில் தான் அரசின் மறைமுக பிரச்னை இருக்கிறது.

குடியிருப்போ, தொழிற்பேட்டையோ அந்தந்த பகுதிகளில் ரோடு, குடிநீர், பாதாள சாக்கடை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டியது அரசின் கடமை.

இதற்கு தான் வரி விதிக்கப்படுகிறது. குடியிருப்புகளுக்கு அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் தமிழக அரசு, தொழில் நிறுவனங்கள் மீது பாரம் சுமத்துகிறது.

உதாரணத்திற்கு 50 ஏக்கர் இடத்தை நாங்கள் தொழிற்பேட்டைக்காக வாங்கினால் அதில் 10 சதவீத இடத்தை திறந்தவெளி பகுதிக்காக தனியாக ஒதுக்க வேண்டும். இதில் 5 ஏக்கர் இடம் குறைந்து விடும். குடியிருப்பு பகுதிகளில் 30 முதல் 40 அடி அகல ரோடு விட வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு குறைந்தது 80 அடி அகல ரோட்டுக்கு இடம் விட வேண்டும். ரோட்டுக்கு கணக்கிட்டால் 30 சதவீத நிலம் ஒதுக்க வேண்டும்.

மொத்தத்தில் 50 ஏக்கர் நிலத்தில் ரோடு, திறந்தவெளி பயன்பாட்டுக்கு என 40 சதவீத இடம் ஒதுக்கினால் மீதியுள்ள 60 சதவீத நிலத்திற்கு இருமடங்கு விலை அதிகமாகி விடும். இதற்கு மேல் உள்கட்டமைப்புக்கும் நாங்கள் 50 சதவீதம் செலவிட வேண்டும் என்றால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

மாநில அரசு 50 சதவீத நிதி என்பதை 90 சதவீதமாக அதிகரித்தால் நிறைய தனியார் தொழிற்பேட்டைகள் உருவாகும். மத்திய அரசின் ஐ.ஐ.டி.ஏ., திட்டத்தின் கீழ் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பேட்டைகளின் கட்டமைப்பு பராமரிப்புக்கு மட்டும் 10 சதவீத நிதி வழங்கப்படுகிறது. புதிதாக உருவாகும் தொழிற்பேட்டைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து உள்கட்டமைப்பு நிதி வழங்கினால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்றனர்.

Source link