ஜெருசலேம்: இந்தியா – இஸ்ரேல் இடையே ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, கல்வி, உற்பத்தி, கலாசாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் என மொத்தம் 17 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
நம் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் சென்றடைந்தார். டெல் அவிவ் நகரில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உற்சாக வரவேற்பு அளித்தார்.
விமான நிலையத்திலேயே இரு நாட்டு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர். இதை தொடர்ந்து பிரதமர் மோடியும், நெதன்யாகுவும் நேற்று மீண்டும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர்.
அப்போது இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, கல்வி, உற்பத்தி, கலாசாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் என மொத்தம் 17 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதை தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா – இஸ்ரேல் இடையிலான உறவு ஆழமான நம்பிக்கை என்ற வலுவான அஸ்திவாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சோதனை காலத்திலும் இந்த உறவு நிலைத்து நிற்கும். அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் இரு நாட்டு உறவை சிறப்பு ஒத்துழைப்பு என்ற கட்டத்திற்கு உயர்த்தும் வரலாற்று முடிவை எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு என்பது வளர்ச்சி இன்ஜினாக, புத்தாக்கமாக மற்றும் பரஸ்பர வளமையாக செயல்படும். பரஸ்பர முதலீட்டை அதிகரிக்க இரு நாடுகளும், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு கையெழுத்திட்டன. அடுத்த கட்டமாக இரு தரப்பும் பயன்பெறும் வகையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்.
உலகில் பயங்கரவாதத்திற்கு இடம் கிடையாது என்பதில் இந்தியாவும், இஸ்ரேலும் உறுதியுடன் உள்ளன. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும், அதனை சகித்துக் கொள்ளவே முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் தோளோடு தோள் கொடுக்கும். அந்த நிலைப்பாடு தொடர்ந்து நீடிக்கும்.
இந்தியாவின் பாதுகாப்பு என்பது மேற்காசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் தொடர்புடையது. எனவே, ஆரம்பம் முதலே அமைதி பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.
பயங்கரவாத விவகாரத்தில் இந்தியாவின் சிந்தனை தெளிவானது. வன்முறைக்கு ஒருபோதும் மனிதநேயம் பலிகடாவாகி விடக்கூடாது. காசா அமைதி ஒப்பந்த திட்டம் என்பது அமைதி பாதைக்கான திறவுக்கோல். அதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும். எதிர்காலத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சு நடத்தவும், அமைதி ஏற்படுத்த ஒத்துழைக்கவும் இந்தியா ஒருபோதும் தயக்கம் காட்டாது. இவ்வாறு அவர் பேசினார்.


