சென்னை: ‘தமிழக சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்’ என, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்த, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர்சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையிலான 15 அதிகாரிகள், புதுச்சேரியில் இருந்து நேற்று சென்னை வந்தனர்.
சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த கூட்டத்தில், பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய ஆறு தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும், தி.மு.க., – அ.தி.மு.க., – வி.சி., – நா.த.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட ஆறு மாநில கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
தி.மு.க., தரப்பில் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்று, ‘முதல் கட்டத்தில், ஒரே நாளில் தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்; ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தலை முடிக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நடத்தை அமலில் இருக்கும்போது, மத்திய அரசு சார்பில் எவ்வித புது அறிவிப்புகளையும் வெளியிடக் கூடாது’ என வலியுறுத்தினர்.
கூட்டத்திற்கு பின்னர், கட்சி பிரதிநிதிகள் அளித்த பேட்டி விபரம்:
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதில் வேறுபாடு கூடாது. ஓட்டுச்சாவடியில் உள்ளேயும், வெளியேயும் ‘சிசிடிவி கேமரா’ அமைக்க வேண்டும். பறக்கும் படையில் மத்திய அரசு ஊழியர்களையும் சேர்க்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும். கள்ள ஓட்டுகள் போடுவதை தடுக்க, சி.ஆர்.பி.எப்., படையினர் கட்டுப்பாட்டில் ஓட்டுச்சாவடிகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்.
தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன்: தி.மு.க., அமைச்சர்கள், எம்.எ.ல்.ஏ.,க்கள், பொறுப்பாளர்கள் இப்போதே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தயாராக உள்ளனர். அதை, வருமான வரி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். பள்ளி தேர்வு, பண்டிகை போன்றவற்றை கணக்கில் கொண்டு, ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் விடுபட்ட 74 லட்சம் பேரில் தகுதியானவர்களை, அரசியல் கட்சிகளின் முகவர்கள் ஒப்புதலோடு, புதிய வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும்.
தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே, ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். முதலில் பிரசாரத்துக்கு அனுமதி கேட்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அ.தி.மு.க., – தி.மு.க., தான் பரிசுப் பொருட்கள் கொடுக்கின்றன; அதை தடுக்க வேண்டும்.
தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின், தகுதியானவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை. அதை பரிசீலிப்பதாக சொல்லி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பதிவான ஓட்டுகள் விபரம் தெளிவாக அறிவிக்கப்படுவதில்லை. அதை சரியாக அறிவிக்க வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்.
வி.சி., பொதுச்செயலர் ரவிகுமார்: ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட வேண்டும். ஓட்டுப்பதிவுக்கும், எண்ணிக்கைக்கும் இடையே அதிக நாட்கள் கூடாது. தேர்தல் பிரசாரம் 15 நாட்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தலைவர்களின் சிலைகளை மூடுவதோ, அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவதோ கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின், கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடன், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசித்தனர். அதேபோல், இன்று நடக்கும் கூட்டத்தில், தமிழக அரசு தலைமை செயலர், உள்துறை செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
