சென்னை: கடைசி நேரத்தில் தே.மு.தி.க., நழுவியதால், பா.ம.க., நிறுவனர் ராமதாசை கூட்டணியில் சேர்க்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, கட்சியே இரண்டாக செயல்பட்டு வரும் நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கான, அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியில், கடந்த ஜனவரி 7ம் தேதி, பா.ம.க., தலைவர் அன்புமணி இணைந்தார். இதனால், தனியாக செயல்பட்டு வரும் ராமதாஸ், அ.தி.மு.க., கூட்டணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
அதிக கட்சிகள் இருப்பதால், ராமதாசை சேர்க்க, தி.மு.க.,வும் தயக்கம் காட்டி வருகிறது. பட்டியலினத்தோரின் ஓட்டுகளை இழக்க வேண்டியிருக்கும் எனக் கூறி, ராமதாசை சேர்க்க, த.வெ.க.,வும் தயங்குகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வை சேர்க்க, அ.தி.மு.க., – பா.ஜ., தலைவர்கள் பேச்சு நடத்தி வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தது. இது, அ.தி.மு.க., கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், ராமதாசை கூட்டணியில் சேர்க்க, பழனிசாமி விரும்புவதாக கூறப்படுகிறது.
அன்புமணி கூட்டணியில் இருப்பதால், ராமதாசை சேர்ப்பது சரியாக இருக்குமா; அதற்கு அன்புமணியை சம்மதிக்க வைப்பது எப்படி என, பழனிசாமி ஆலோசித்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பேரனுடன் பேசிய பா.ஜ.,
தி.மு.க., அல்லது பா.ஜ., கூட்டணியில் இணைய, தன் ஆதரவாளர்களுடன் ராமதாஸ் ஆலோசித்து வருகிறார். அவரது தரப்பில், மகள் ஸ்ரீ காந்தியும் பேரன் சுகுந்தனும் கூட்டணி பேச்சு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராமதாசை கூட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ., தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள ஹோட்டலில், பா.ஜ., பிரமுகர்களை, சுகுந்தன் நேற்று காலை சந்தித்து பேசினார்.
அப்போது, பா.ஜ., தரப்பில் கொடுக்கப்பட்ட சில வாக்குறுதிகள் அடங்கிய கடிதம், சுகுந்தனிடம் கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்துடன் சென்று, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து சுகுந்தன் பேசி உள்ளார்.
