சென்னை : சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது, வழக்குப்பதிவு செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, அமலாக்கத் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
காங்கிரஸ் ஆட்சியில், மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் இருந்தார். அப்போது, ‘ஏர்செல் – மேக்சிஸ்’ என்ற நிறுவனம், 3,565.91 கோடி ரூபாய்க்கு, வெளிநாட்டு முதலீடுகளை பெற அனுமதி கோரியது.
இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவுக்கு இருந்தது. ஆனால், அமைச்சரவை ஒப்புதல் பெறாமல், கடந்த 2006, மார்ச் 20ல், சிதம்பரம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அப்போது, வெளிநாட்டு முதலீடுக்கு சட்ட விரோதமாக அனுமதி கொடுத்ததற்காக, சிதம்பரம் மகன் கார்த்திக்கு சொந்தமான நிறுவனம் வாயிலாக, லஞ்சமாக, 1.16 கோடி ரூபாய் பெறப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இப்பணம் தொடர்பாக, கார்த்தி மற்றும் சிதம்பரம் ஆகியோரிடையே பணப் பரிமாற்றம் நடந்து இருப்பதையும், சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த விவகாரத்தில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்து இருப்பது பற்றி அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிதம்பரத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு, மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதற்கான கடிதத்தை, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்து.
