அமலாக்கத்துறை இயக்குநர் சென்னையில் 3 நாள் முகாம்

சென்னை : தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மீதான, 500க்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதால், அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன், சென்னையில் மூன்று நாட்கள் முகாமிட்டு, ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய அமைச்சர்கள் வீடு, அலுவலங்களிலும் சோதனை நடத்தி உள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், டெண்டர் முறைகேடு மற்றும் பணி நியமனத்தில், 1,020 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு மூன்று கடிதங்கள் அனுப்பி உள்ளனர்.

இந்த ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், சென்னை மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணையில், 500க்கும் மேற்பட்ட வழக்குகளில், முன்னேற்றம் இல்லாமல் உள்ளது .

இந்நிலையில், டில்லியில் இருந்து, அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் நேற்று இரவு சென்னை வந்தார். இங்கு மூன்று நாட்கள் முகாமிட்டு, நிலுவையில் உள்ள விசாரணை குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

ஏற்கனவே, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ள வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, விரைவில் முடிக்க வேண்டும் என்றும், அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Source link