வெகு சில கோவை நிறுவனங்களே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன: பி.எஸ்.இ., – எம்.டி. சுந்தர்ராமன் ஆதங்கம்

கோவை: ”எம்.எஸ்.எம்.இ., க்கள் பங்கு சந்தையில் பட்டியலிடுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன,” என, மும்பை பங்கு சந்தை நிர்வாக இயக்குநர் சுந்தர்ராமன் ராமமூர்த்தி பேசினார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில், ‘சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சந்தை அணுகலை வலுப்படுத்துதல்’ எனும் தலைப்பில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது.

மும்பை பங்கு சந்தை நிர்வாக இயக்குநர் சுந்தர்ராமன் ராமமூர்த்தி பேசியதாவது:நாடு நன்றாக இருக்க வேண்டும் எனில், அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் இருக்க வேண்டும். மக்கள் முதலீடு செய்தால் தான் நாடு முன்னேறும்.

நாட்டின் பொருளாதாரத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. நாட்டில், 7.80 கோடி எம்.எஸ்.எம்.இ., க்கள் உள்ளன. அவை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 31 சதவீதம் பங்களிக்கின்றன. 49 சதவீதஏற்றுமதிக்கு காரணமாக உள்ளன. 34 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு தருகின்றன.

அதில், 39 சதவீதம் பெண்கள். ஆனால், 1,400 நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன.

முயற்சி செய்வதில் தமிழன் பின்தங்குபவன் அல்ல. ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதை எம்.எஸ்.எம்.இ.,க்கள் வாயிலாக எளிதில் அடையலாம். உதயம் தளத்தில் தமிழகத்தின், 61 லட்சம் எம்.எஸ்.எம்.இ.,க்கள் பதிவு செய்துள்ளன.

மாநிலத்தின் ஜி.டி.பி.,ல் இவை, 8 சதவீதம் பங்களிக்கின்றன. இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பத் துறையில், கோவை முன்னிலை வகிக்கிறது. ஆனால், குறைந்த அளவு நிறுவனங்களே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்று, நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னதாக இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளைத் தலைவர் ராஜேஷ் லுந்த் வரவேற்றார். துணைத் தலைவர் அண்ணாமலை, பொருளாளர் கைலாஷ்குமார், மும்பை பங்கு சந்தை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவு தலைவர் ராதாகீர்த்திவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Source link