சென்னை: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அ.தி.மு.க., – எம்.பி., இன்பதுரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024- — 25ம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிட நியமனங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டு உள்ளதால், வழக்குப் பதிவு செய்யுமாறு, கடந்தாண்டு அக்., 27ல் தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
கடிதத்துடன், 232 பக்க ஆவணங்களையும், அமலாக்கத் துறை அனுப்பியிருந்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யும்படி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரும், அ.தி.மு.க., – எம்.பி., இன்பதுரையும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ‘அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உடனே வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கடந்த 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று காலை மனுதாரர் இன்பதுரை தரப்பில், வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன் ஆஜராகி, ”நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை,” என முறையீடு செய்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், ‘இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால், விசா ரணைக்கு எடுத்து கொள்ளப்படும்’ என்றனர். இதையடுத்து, இன்பதுரை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மனு விபரம்:
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கோரி, கடந்த 25ம் தேதி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் அளித்தேன். இருப்பினும், இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை; இது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.
அரசியல் செல்வாக்கால், அமைச்சர் நேரு துறையில் நடந்த ஊழல் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்வது தடுக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் நியாயமாகவும், பாரபட்சமின்றியும் விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவை செயல் படுத்தாத, லஞ்ச ஒழிப்பு துறை பொறுப்பு இயக்குநர் ஏ.டி.துரைகுமார் உள்ளிட்ட அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
