புதுடில்லி: டில்லியில் கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இருதரப்பினர் காயமடைந்தனர். 51 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதிய யுஜிசி விதிகளை அமல்படுத்த வேண்டும், ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவர வேண்டும், துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி, ஜேஎன்யு மாணவர்கள் நேற்று பேரணி செல்ல முயன்றனர்.
பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு கொண்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள்.
பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, மாணவர்கள் தடுப்புகளைச் சேதப்படுத்தியதாகவும், கற்கள், காலணிகள் மற்றும் கொடிக் கம்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். சிலர் போலீசாரை கடித்தும் வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜேஎன்யு மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 4 பேர் உள்பட 51 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து டில்லியில் விடிய விடிய ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க பல்கலை வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக, பிப்ரவரி மாத தொடக்கத்தில் அம்பேத்கர் நூலகத்தில் இருந்த கண்காணிப்பு உபகரணங்களைச் சேதப்படுத்தியதால் கம்யூனிஸ்ட் ஆதரவு மாணவர் சங்க நிர்வாகிகள் ஐந்து பேர் நீக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக, பல்கலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
